வேதாகமத்தில் இயேசு சொன்ன வார்த்தை- "வாங்குவதைப் பார்க்கிலும் பிறருக்கு கொடுப்பது நலம்"


பிறரிடம் எதையும் வாங்குவதை விட மற்றவர்களுக்கு கொடுப்பது மனநிறைவையும், உற்சாகத்தையும் தருகிறது. மற்றவர்களுக்கு உதவி செய்வதற்கே நமக்கு வசதிகளும், வாய்ப்புகளும் இறைவனால் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று நினைத்து பார்த்தால் உள்ளம் சந்தோசத்தால் நிரம்பும்.


அன்பானவர்களே, மனித வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும், ஒவ்வொரு மனிதர்களும், அன்பு, பாசம், மரியாதை, ஆறுதல் வார்த்தைகள், உதவிகள் போன்ற ஏதோ ஒன்றிற்காக எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றார்கள்.

வேதாகமத்தில் இயேசு சொன்ன வார்த்தைகளை அப்போஸ்தலர் 20:35-ல் பவுலடியார் எழுதுகிறார், "வாங்குகிறதைப் பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம்".

ஆம் பிரியமானவர்களே, பிறரிடம் எதையும் வாங்குவதை விட மற்றவர்களுக்கு கொடுப்பது மனநிறைவையும், உற்சாகத்தையும் தருகிறது. மற்றவர்களுக்கு உதவி செய்வதற்கே நமக்கு வசதிகளும், வாய்ப்புகளும் இறைவனால் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று நினைத்து பார்த்தால் உள்ளம் சந்தோசத்தால் நிரம்பும்.

உயிருக்கு போராடும் ஒரு வருக்கு குருதியை கொடையாக அளித்துப் பாருங்கள், அவரைப் பார்க்கும் போதெல்லாம் நீங்கள் பரவசப்படுவீர்கள். வறுமையில் வாடுவோருக்கு உதவி செய்து பாருங்கள், அவர்களின் வளமான வாழ்க்கைக்கு பின்னால் நீங்கள் இருப்பதை நினைத்துப் பாருங்கள், அதில் நீங்கள் அடையும் திருப்தி அலாதியானது.

கல்வி பயில்வதற்கு ஒருவருக்கு உதவி செய்து பாருங்கள், அவர்கள் கற்று சான்றோனாய் நிற்பதை பார்க்கும் போது நீங்கள் ஆனந்தப்படுவீர்கள். ஆதரவற்று இருப்பவர்களிடம் அன்பாக பேசிப் பாருங்கள், உங்களால் முடிந்த உதவியை செய்து பாருங்கள், நல்ல விஷயங்களுக்காக மற்றவர்களை உற்சாகப்படுத்துங்கள், தைரியமூட்டும் வார்த்தைகளை கூறுங்கள், பரிசுப்பொருட்கள் கொடுத்து ஊக்குவியுங்கள்.

உங்களுக்கு இவை சிறு விஷயமாக இருக்கலாம். ஆனால் உங்கள் மூலம் கிடைக்கும் உதவிகள், வழிகாட்டுதல்கள், பாராட்டுகள், வாழ்த்துக்கள், பரிசுப்பொருட்கள், அன்பான, ஆறுதலான வார்த்தைகள் நிச்சயமாக அவர்களை உற்சாகப்படுத்தும். வாழ்க்கையில் மேலும் பல உயரங்களை அவர்கள் எட்டிப்பிடிக்க உந்துகோல்களாக இருக்கும்.

ஆகவே, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மற்றவர்களுக்கு உதவி செய்ய மறவாதிருங்கள். நீங்கள் உயர்ந்த நிலையில் இருக்கும் போது, மற்றவர்களுக்கு செய்யத்தக்க நியாயமான உதவிகளை செய்ய மறவாதிருங்கள். தேவை உள்ளவர்களுக்கு உதவுவது தான் மனித வாழ்வின் அடிப்படை பண்பு என்பதை உணர்வோம்.

'இயேசுவும் நமக்காக மரித்ததினாலே, நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்' (ரோமர் 5:8).

'ஒருவன் தன் சிநேகிதருக்காக தன் ஜீவனை கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை'. (யோவான் 15:13).

இதற்கு மேல் கொடுப்பதற்கு ஒன்றுமேயில்லை. நாம் நித்திய ஜீவனை அடைவதற்காக தன் ஜீவனையே கொடுத்தவர் இயேசு. இன்றைக்கு நாமும் அவரிடம் அன்பு கூர்ந்து நம்பிக்கையுடன், நம் தேவைகளை அவரிடத்தில் பிரார்த்தனை மூலம் கேட்டால் நிச்சயம் நிறைவேற்றுவார்.

அவர் போதனையில் வாழும் நாமும், தேவையுள்ள மனிதர்களுக்காக, அன்பு, பரிவு, தைரியம், ஆறுதலான வார்த்தைகள் போன்றவற்றையும், மனப்பூர்வமான உற்சாகத்துடன் நம்மால் இயன்ற உதவிகளை அவர்களுக்கு செய்யும் போது நம் உள்ளம் மகிழும். அவர்கள் உள்ளம் குளிரும், இதன்மூலம் மனித வாழ்வின் அர்த்தம் புரியும்.

இறைக்க இறைக்கத் தான் நீருணியும் ஊறும். நம்மிடம் இருப்பதை மனமுவந்து கொடுப்போம். இறைவன் நமக்கு பல மடங்கு அருளச்செய்வார்.


Next Story