திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா.. தங்க ரதத்தில் எழுந்தருளி அருள்பாலித்த ஜெயந்திநாதர்


திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா.. தங்க ரதத்தில் எழுந்தருளி அருள்பாலித்த ஜெயந்திநாதர்
x
தினத்தந்தி 16 Nov 2023 5:25 AM GMT (Updated: 16 Nov 2023 12:28 PM GMT)

சுவாமி-அம்பாள்களுக்கு மஞ்சள், பால், இளநீர், தேன், தயிர், பன்னீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

திருச்செந்தூர்:

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 13-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 3-ம் திருநாளான நேற்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது.

காலையில் உச்சிகால அபிஷேகம், தீபாராதனையை தொடர்ந்து யாகசாலையில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி- தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலையில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி- தெய்வானையுடன் திருவாவடுதுறை ஆதீன கந்தசஷ்டி மண்டபத்தில் எழுந்தருளினார்.

அங்கு சுவாமி-அம்பாள்களுக்கு மஞ்சள், பால், இளநீர், தேன், தயிர், பன்னீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமி-அம்பாள்களுக்கு அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்றது.

பின்னர் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்க ரதத்தில் எழுந்தருளி கிரி பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நான்காம் நாளான இன்றும் யாக சாலை பூஜையுடன் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாலையில் நடக்கிறது.


Next Story