வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் போட்டி: தொடரை கைப்பற்றியது இந்தியா..!


வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் போட்டி: தொடரை கைப்பற்றியது இந்தியா..!
x
தினத்தந்தி 10 Feb 2022 12:27 AM GMT (Updated: 10 Feb 2022 12:27 AM GMT)

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரையும் கைப்பற்றியது.

ஆமதாபாத், 

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. இந்திய அணியில் இஷான் கிஷன் நீக்கப்பட்டு லோகேஷ் ராகுல் திரும்பினார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பொல்லார்ட் லேசான காயத்தால் அவதிப்படுவதால் ஓய்வு அளிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக ஆல்-ரவுண்டர் ஒடியன் சுமித் சேர்க்கப்பட்டார். கேப்டன் பொறுப்பை நிகோலஸ் பூரன் கவனித்தார்.

‘டாஸ்’ ஜெயித்த வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பூரன் முதலில் இந்தியாவை பேட் செய்ய அழைத்தார். இதையடுத்து இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரராக கேப்டன் ரோகித் சர்மாவுடன், யாரும் எதிர்பாராத வகையில் இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் நுழைந்தார். ஆடுகளத்தில் வேகப்பந்து வீச்சு நன்கு எடுபட்டது. ‘பிட்ச்’ ஆனதும் பந்து திரும்புவதுடன் ஓரளவு பவுன்சும் காணப்பட்டதால் அதை சாதகமாக பயன்படுத்தி வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர்கள் சரமாரியாக நெருக்கடி கொடுத்தனர்.

கேப்டன் ரோகித் சர்மா (5 ரன்), கெமார் ரோச்சின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் ஷாய் ஹோப்பிடம் கேட்ச் ஆனார். தொடர்ந்து ரிஷாப் பண்ட் (18 ரன், 34 பந்து), விராட் கோலி (18 ரன், 30 பந்து) ஆகிய இருவரையும் ஒரே ஓவரில் ஒடியன் சுமித் காலி செய்தார். பண்ட், ஆப்-ஸ்டம்புக்கு வெளியே எகிறிய பந்தை லெக்சைடு வாக்கில் திருப்பி அடிக்க முயற்சித்து கேட்ச் ஆனார். இதே போல் கோலி விக்கெட் கீப்பர் ஹோப்பிடம் பிடிபட்டார்.

அப்போது இந்திய அணி 43 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து பரிதவித்தது. அடுத்து வந்த துணை கேப்டன் லோகேஷ் ராகுலும் வந்த வேகத்தில் வெளியேறி இருக்க வேண்டியது. 4 ரன்னில் இருந்த போது அவர் கொடுத்த கேட்ச்சை விக்கெட் கீப்பர் ஷாய் ஹோப் நழுவ விட்டதால் தப்பினார்.4-வது விக்கெட்டுக்கு லோகேஷ் ராகுலும், சூர்யகுமார் யாதவும் கைகோர்த்து நிதானத்தை கடைபிடித்தனர். இதனால் ஸ்கோர் மிகவும் மந்தமானது. 26-வது ஓவரில் தான் இந்தியா 100 ரன்களை தொட்டது.

ஆனால் ரன்வேகத்தை உயர்த்த முனைப்பு காட்டிய சமயத்தில் ராகுல் (49 ரன், 48 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) ரன்-அவுட்டில் வீழ்ந்தார். அதாவது ஸ்கோர் 134 ரன்களை எட்டிய போது (29.4 ஓவர்) ராகுல் 2-வது ரன்னுக்கு பாதி தூரம் ஓடி வந்து சற்று சுணக்கம் காட்டியதால் ரன்-அவுட் ஆக நேர்ந்தது. மறுமுனையில் 2-வது அரைசதத்தை பூா்த்தி செய்த சூர்யகுமார் யாதவ் 64 ரன்களில் (83 பந்து, 5 பவுண்டரி) ஆட்டமிழந்தார். இந்த ஜோடி நடையை கட்டியதும் இந்தியாவின் ரன்வேகம் தளர்ந்தது. 250 ரன்களை தாண்டுவது போல் சென்ற அணியின் ஸ்கோரை வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள் கடைசி கட்டத்தில் கட்டுப்படுத்தினர். பின்வரிசையில் வாஷிங்டன் சுந்தர் (24 ரன்), தீபக் ஹூடா (29 ரன்) மட்டும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்தனர்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்தியா 9 விக்கெட்டுக்கு 237 ரன்கள் சேர்த்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஒடியன் சுமித், அல்ஜாரி ஜோசப் தலா 2 விக்கெட் சாய்த்தனர். அடுத்து 238 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்களை இந்திய பவுலர்கள் மிரள வைத்தனர். பிரான்டன் கிங் (18 ரன்), டேரன் பிராவோ (1 ரன்) ஆகியோரின் விக்கெட்டுகளை வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா கபளீகரம் செய்தார். மற்றொரு தொடக்க வீரர் ஷாய் ஹோப் (27 ரன்), யுஸ்வேந்திர சாஹலின் சுழலில் சிக்கினார். கேப்டன் நிகோலஸ் பூரன் (9 ரன்), ஜாசன் ஹோல்டர் (2 ரன்) நிலைக்கவில்லை. இதற்கு மத்தியில் கொஞ்சம் தாக்குப்பிடித்து ஆடிய ஷமார் புரூக்ஸ் 44 ரன்னில் (64 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) தீபக் ஹூடாவின் பந்து வீச்சில் கேட்ச் ஆனார். வெஸ்ட் இண்டீஸ் 117 ரன்னுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடியது.

இதன் பின்னர் அகேல் ஹூசைன் (34 ரன்), ஒடியன் சுமித் (24 ரன், 20 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) போராடினாலும் பலன் இல்லை. அந்த அணி 46 ஓவர்களில் 193 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் இந்தியா 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா 9 ஓவர்களில் 3 மெய்டனுடன் 12 ரன்கள் மட்டுமே வழங்கி 4 விக்கெட்டுகளை வீழ்த்தி பிரமாதப்படுத்தினார். அவரே ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் சொந்தமாக்கியது. ஏற்கனவே முதலாவது ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. கடைசி ஒரு நாள் போட்டி இதே மைதானத்தில் நாளை நடக்கிறது.

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான நேரடி ஒரு நாள் கிரிக்கெட் தொடரை இந்தியா தொடர்ந்து 11-வது முறையாக கைப்பற்றி இருக்கிறது. கடைசியாக 2006-ம் ஆண்டில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்தியா இழந்திருந்தது. குறிப்பிட்ட ஒரு அணிக்கு எதிராக தொடர்ந்து அதிக ஒரு நாள் தொடர்களை ருசித்த பாகிஸ்தான் அணியின் சாதனையை இந்தியா சமன் செய்தது. ஜிம்பாப்வேக்கு எதிராக பாகிஸ்தான் தொடர்ச்சியாக 11 ஒரு நாள் தொடர்களை வென்று இருந்தது.

Next Story