இலங்கைக்கு எதிரான 2-வது டி20: சூப்பர் ஓவரில் வெற்றிபெற்ற ஆஸ்திரேலியா.!


இலங்கைக்கு எதிரான 2-வது டி20: சூப்பர் ஓவரில் வெற்றிபெற்ற ஆஸ்திரேலியா.!
x
தினத்தந்தி 13 Feb 2022 12:20 PM GMT (Updated: 13 Feb 2022 12:20 PM GMT)

விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில், ஆஸ்திரேலிய அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது.

சிட்னி,

இலங்கை அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டி 20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று 1-0 என முன்னிலையில் இருந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது இன்று நடைபெற்றது. 

இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரரான கேப்டன் பின்ச் 25 ரன்கள் எடுத்தார்.  அணியில் அதிகபட்சமாக ஜோஸ் இன்ங்லிஸ் 48 ரன்கள் குவித்தார். மேக்ஸ்வெல், ஸ்மித், ஸ்டோஸ்னிஸ் ஆகியோர் பெரிய அளவில் ரன்கள் குவிக்கவில்லை. இறுதியில் அந்த அணி  20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது.

இதனை அடுத்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி விளையாடிய இலங்கை அணியில் தொடக்க ஆட்டக்காரரான பதுன் நிஷாங்கா ஒருபுறம் போராட, மறுபுறம் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தது. கேப்டன் ஷனகா அதிரடியாக 34 ரன்கள் எடுத்தார். இறுதிகட்டத்தில் இலங்கை அணி 8 விக்கெட்டுகளை  இழந்த நிலையில், ஆஸ்திரேலிய அணியே வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அணியின் பத்தாம் நிலை வீரரான மகிஷ் தீக்‌ஷனா 3 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்து ஆட்டத்தை சமனடைய செய்தார்.

இதையடுத்து சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் முதலில் விளையாடிய இலங்கை அணி, ஹேசில்வுட்டின் அருமையான பந்துவீச்சால் 5 ரன்களே திரட்டியது. பின்னர் ஆஸ்திரேலிய அணி இலங்கை நிர்ணயித்த எளிதான இலக்கை கடந்து வெற்றி பெற்றது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.


Next Story