'டாஸ் போடுவதற்கு 5 நிமிடத்துக்கு முன்பு தான்...'- கே.எல்.ராகுலை பாராட்டிய ரோகித் சர்மா...!
16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் தற்போது சூப்பர்4 சுற்று ஆட்டங்கள் இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
கொழும்பு,
16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் தற்போது சூப்பர்4 சுற்று ஆட்டங்கள் இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. சூப்பர்4 சுற்றுக்கு தகுதி கண்டுள்ள இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் அணிகள் தங்களுக்குள் தலா ஒருமுறை மோத வேண்டும்.
இந்த தொடரில் சூப்பர் 4 சுற்றில் நேற்று முன் தினம் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி 24.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 147 ரன்கள் எடுத்து இருந்த போது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இந்த ஆட்டத்துக்கு மாற்று நாள் (ரிசர்வ் டே) ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்ததால் பாதியில் நின்று போன ஆட்டம் நேற்று நடைப்பெற்றது.
இதில் தொடர்ந்து பேட்டிங் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 356 ரன்கள் குவித்தது. கோலி 122 ரன், ராகுல் 111 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இதையடுத்து 357 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணி 32 ஓவர்களில் 128 ரன்னில் அடங்கியது. ஹாரிஸ் ரவுப், நசீம் ஷா காயத்தால் பேட் செய்யவில்லை. இதன் மூலம் இந்தியா 228 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பெற்றது.
228 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-
மழை குறுக்கிட்ட நிலையில் சிறப்பாக விளையாடி முடித்ததற்கு, மைதான ஊழியர்கள் முக்கிய காரணமாகும். தார்ப்பாய்களால் மைதானத்தை மூடுவது, பின்னர் நீக்குவது எவ்வளவு கடினம் என்பது எனக்குத் தெரியும். ஒட்டுமொத்த அணியுமான நாங்கள் அவருக்கு நன்றி தெரிவித்தாக வேண்டும். பேட்டிங்கை பொறுத்தவரையில் தொடக்கத்தில் இருந்தே சிறப்பான ஆட்டம்.
நாங்கள் போட்டியை தொடங்கியபோது, இது சிறந்த விக்கெட் என்பது எங்களுக்கு தெரிந்தது. மழைக்கு ஏற்றபடி எங்களை மாற்றிக் கொண்டோம். கே.எல். ராகுல், விராட் கோலி ஆகிய இருவரும் அனுபவ வீரர்கள். அவர்கள் கொஞ்சம் நேரம் எடுத்துக் கொண்டு, அதன்பின் ஆட்டத்தை கொண்டு செல்வார்கள் என்பது நாங்கள் அறிந்ததே. பும்ரா சிறப்பாக பந்து வீசினார்.
இரண்டு வழிகளிலும் பந்தை ஸ்விங் செய்தார். கடந்த 8 முதல் 10 மாதங்கள் கடினமாக உழைத்துள்ளார். கே.எல். ராகுல் ஆடும் லெவனில் இடம்பெறுவது டாஸ் போடுவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்புதான் முடிவானது. காயத்திற்குப் பிறகு நீண்ட நாட்கள் கழித்து, களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது வீரரின் மனநிலை என்பதை காட்டிவிட்டார். இவ்வாறு அவர் கூறினார்.