காயம் காரணமாக டி20 உலகக் கோப்பையில் இருந்து பும்ரா விலகல் - பிசிசிஐ அதிகாரபூர்வ அறிவிப்பு


காயம் காரணமாக டி20 உலகக் கோப்பையில் இருந்து பும்ரா விலகல் - பிசிசிஐ அதிகாரபூர்வ அறிவிப்பு
x

Image Courtesy: AFP 

தினத்தந்தி 3 Oct 2022 4:39 PM GMT (Updated: 3 Oct 2022 4:40 PM GMT)

உலகக்கோப்பை தொடரிலிருந்து ஜஸ்பிரீத் பும்ரா விலகியுள்ளதாக பிசிசிஐ இன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

மும்பை,

20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 16-ந்தேதி முதல் நவம்பர் 13-ந்தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இருந்து முன்னணி வேகப்பந்து வீரரான ஜஸ்பிரீத் பும்ரா முதுகுவலி காயம் காரணமாக விலகியதாக கடந்த சில தினங்களுக்கு முன் தகவல் வெளியாகி இருந்தது.

இருப்பினும் 20 ஓவர் உலகக்கோப்பையில் பும்ரா விளையாட இன்னும் வாய்ப்பு இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரிய தலைவரும், முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி 2 தினங்களுக்கு முன் தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக அவர், "பும்ராவின் நிலை குறித்து இன்னும் 2 அல்லது 3 நாட்களில் இறுதி முடிவு எடுக்கப்படும்" என கூறி இருந்தார்.

இந்த நிலையில் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரிலிருந்து ஜஸ்பிரீத் பும்ரா விலகியுள்ளதாக பிசிசிஐ இன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை அணியில் இருந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை பிசிசிஐ மருத்துவக் குழு விலக்கியுள்ளது. விரிவான மதிப்பீடு மற்றும் நிபுணர்களுடன் கலந்தாலோசித்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஜஸ்பிரித் பும்ராவுக்குப் பதிலாக மாற்று வீரர் விரைவில் அறிவிக்கப்படுவார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.


Next Story