பாகிஸ்தான் அணிக்கு பெரும் பின்னடைவு...ஆசிய கோப்பையில் இருந்து வெளியேறும் இரு முன்னணி வீரர்கள்...!


பாகிஸ்தான் அணிக்கு பெரும் பின்னடைவு...ஆசிய கோப்பையில் இருந்து வெளியேறும் இரு முன்னணி வீரர்கள்...!
x

image courtesy; AFP

ஆசிய கோப்பை தொடரில் இருந்து பாகிஸ்தான் அணியின் இரு முன்னணி வீரர்கள் வெளியேற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொழும்பு,

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் தற்போது சூப்பர்4 சுற்று ஆட்டங்கள் இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வருகின்றன. சூப்பர்4 சுற்றுக்கு தகுதி கண்டுள்ள இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் அணிகள் தங்களுக்குள் தலா ஒருமுறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

இந்த தொடரின் சூப்பர் 4 சுற்றில் நேற்று முன்தினம் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி 24.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 147 ரன்கள் எடுத்து இருந்த போது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இந்த ஆட்டத்துக்கு மாற்று நாள் (ரிசர்வ் டே) ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்ததால் பாதியில் நின்று போன ஆட்டம் நேற்று நடைபெற்றது.

இதில் தொடர்ந்து பேட்டிங் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 356 ரன்கள் குவித்தது. கோலி 122 ரன், ராகுல் 111 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இதையடுத்து 357 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணி 32 ஓவர்களில் 128 ரன்னில் அடங்கியது. ஹாரிஸ் ரவுப், நசீம் ஷா காயத்தால் பேட் செய்யவில்லை. இதன் மூலம் இந்தியா 228 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பெற்றது. குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

இந்த ஆட்டத்தின் இடையே பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் நசீம் ஷா மற்றும் ஹரிஸ் ரவூப் இருவரும் காயமடைந்து வெளியேறினர். அதில் ஹரிஸ் ரவூப் நேற்று ஆட்டம் தொடங்கும் போதே காயம் காரணமாக களத்தில் இறங்கவில்லை. நசீம் ஷா அவருடைய கடைசி ஓவரை வீசும் போது காயம் எற்பட்டு பாதியில் வெளியேறினார். அந்த ஓவரை இப்திகார் அகமது வீசினார்.

இந்நிலையில் இருவரும் வியாழன் அன்று இலங்கைக்கு எதிரான சூப்பர் 4 சுற்றின் பாகிஸ்தானின் இறுதி ஆட்டத்திற்கு முன் குணமடைவார்கள் என்று உறுதியாக தெரியவில்லை. அந்த ஆட்டத்திற்கு நசீம் மற்றும் ரவூப் இருவரும் குணமடைவார்கள் என்று அணி நிர்வாகம் நம்பிக்கை கொண்டிருந்தாலும், உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் அவர்கள் மீது ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. இருவரும் அணியின் மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் உள்ளனர்.

ஒருவேளை காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரிலிருந்து நசீம் அல்லது ரவூப் விலகும் பட்சத்தில் மாற்று வீரர்களாக ஷான்வாஸ் தஹானி மற்றும் ஜமான் கான் இருவரையும் அணியில் சேர்க்க ஆசிய கிரிக்கெட் வாரியத்திடம் கோரிக்கை வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு முன்னேற்பாடாக ஷான்வாஸ் தஹானி மற்றும் ஜமான் கான் இருவருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுத்துள்ளது.

தற்போது சூப்பர் 4 சுற்றின் புள்ளி பட்டியலில் பாகிஸ்தான் அணி மூன்றாவது இடத்தில் உள்ளது. அந்த அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும்.


Next Story