உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியாவின் முதல் போட்டிக்கான சிறப்பு முன்பதிவு டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன


உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியாவின் முதல் போட்டிக்கான சிறப்பு முன்பதிவு டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன
x

தொடங்கிய சிறிது நேரத்திலேயே சிறப்பு முன்பதிவு டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன.

புதுடெல்லி,

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்(50 ஓவர்) அக்டோபர் 5-ந்தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெறுகிறது. ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

அக்டோபர் 8-ந்தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன. உலகக்கோப்பை போட்டிக்கான டிக்கெட்டுகள் 'புக் மை ஷோ' இணையதளம் மூலம் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த இணையதளத்தில் மாஸ்டர்கார்டு பயனாளர்களுக்கு இந்தியா-ஆஸ்திரேலியா போட்டிக்கான சிறப்பு முன்பதிவு இன்று தொடங்கியது. தொடங்கிய சிறிது நேரத்திலேயே சிறப்பு முன்பதிவு டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன. இதே போல் சென்னையில் நடக்கும் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான்-தென் ஆப்பிரிக்கா போட்டிகளுக்கான டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன.

கடந்த 28-ந்தேதி இந்திய அணியின் அனைத்து போட்டிகளுக்குமான சிறப்பு முன்பதிவு டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்டது. ஒரு நபர் இரண்டு டிக்கெட்டுகளை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். இந்நிலையில் விற்பனை தொடங்கிய சில மணி நேரங்களில் இந்தியாவின் அனைத்து போட்டிகளுக்குமான சிறப்பு முன்பதிவு டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன.

அதே சமயம் மாஸ்டர்கார்டு பயனாளர்களுக்கான சிறப்பு முன்பதிவு டிக்கெட்டுகள் மட்டுமே தற்போது விற்பனையாகி உள்ளன. தொடர்ந்து இந்தியா-ஆஸ்திரேலியா ஆட்டத்துக்கான டிக்கெட்டுகள் வருகிற 31-ந்தேதியும்(நாளை), ஆமதாபாத்தில் இந்தியா-பாகிஸ்தான் மோதும் லீக் ஆட்டத்துக்கான டிக்கெட்டுகள் வருகிற 3-ந்தேதியும் விற்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story