காணாமல் போன பை... உருக்கமான கோரிக்கை வைத்த டேவிட் வார்னர்..!


காணாமல் போன பை... உருக்கமான கோரிக்கை வைத்த டேவிட் வார்னர்..!
x

image courtesy; AFP

தினத்தந்தி 2 Jan 2024 10:01 AM GMT (Updated: 2 Jan 2024 10:56 AM GMT)

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நாளை தொடங்குகிறது.

சிட்னி,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் இரண்டு போட்டிகள் முடிந்துள்ளன. அந்த இரு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி விட்டது.

இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நாளை தொடங்குகிறது. இந்த போட்டியுடன் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்த டெஸ்ட் போட்டிக்காக மெல்போர்னில் இருந்து சிட்னிக்கு சென்றபோது அவரது பை காணாமல் போனது. அந்த பைக்குள் சர்வதேச டெஸ்ட் போட்டியில் தான் அறிமுகம் ஆனபோது கொடுத்த ஆஸ்திரேலியாவின் பச்சை நிற தொப்பி இருப்பதாக கூறியுள்ளார். எனவே யார் எடுத்திருந்தாலும் அதை திருப்பிக் கொடுக்குமாறு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான கோரிக்கை வைத்துள்ளார்.

அதில், "துரதிர்ஷ்டவசமாக யாரோ எனது பையுடன் எனது மகள்களின் பரிசு பொருட்கள் இருந்த பையையும் எடுத்து சென்றுள்ளனர். அந்த பைக்குள் என்னுடைய பச்சை நிற தொப்பி உள்ளது. அது எனக்கு உணர்வுபூர்வமானது. என்னுடைய கடைசி டெஸ்ட் போட்டியில் அதை அணிந்து விளையாட வேண்டும் என விரும்புகிறேன்.

ஒருவேளை நீங்கள் என்னுடைய பையை விரும்பினால் அதேபோன்ற மற்றொன்றை நான் கொடுக்க தயாராக இருக்கிறேன். எனது பையை என்னிடமோ அல்லது ஆஸ்திரேலிய வாரியத்திடமோ திருப்பி கொடுக்கும்போது நீங்கள் எந்த பிரச்சினையையும் சந்திக்க மாட்டீர்கள். எனவே நீங்கள் என்னுடைய பையை கொடுத்தால் இதுபோன்ற பையை உங்களுக்கு நான் தருவேன்" என்று கோரிக்கை வைத்துள்ளார்.


Next Story
  • chat