விராட் கோலி விலகல் குறித்து புதிய தகவலை வெளியிட்ட டி வில்லியர்ஸ்


விராட் கோலி விலகல் குறித்து புதிய தகவலை வெளியிட்ட டி வில்லியர்ஸ்
x

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இருந்து விராட் கோலி விலகினார்.

கேப்டவுன்,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2-வது போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது.

முன்னதாக இந்த 2 போட்டிகளுக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி இடம்பெற்றிருந்தார். இருப்பினும் இந்த டெஸ்ட் தொடர் ஆரம்பிப்பதற்கு சில நாட்களுக்கு முன்பாக தனிப்பட்ட காரணங்களுக்காக இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 போட்டிகளில் இருந்து விலகுவதாக கோலி அறிவித்தார்.

அவர் தனிப்பட்ட காரணத்துக்காக விலகி இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியம் விளக்கம் அளித்து இருந்தாலும் குறிப்பிட்ட காரணம் எதுவும் சொல்லப்படவில்லை. இதனால் கோலி விலகலுக்கான காரணம் குறித்து ரசிகர்கள் மத்தியில் பெருத்த விவாதமே கிளம்பியது. அவரது அம்மாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் ஒதுங்கியதாக வெளியான செய்தியை கோலியின் சகோதரர் சமீபத்தில் மறுத்தார்.

இந்த நிலையில் விராட் கோலியின் திடீர் விலகலுக்கான காரணம் குறித்து தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனும், விராட் கோலியின் நண்பருமான டி வில்லியர்ஸ் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், 'விராட் கோலியின் மனைவி கர்ப்பம் அடைந்து இருக்கிறார். இதனால் விராட் கோலி தனது குடும்பத்துடன் கூடுதல் நேரத்தை செலவிட விரும்புகிறார். எனவேதான் அவர் இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவில்லை. பெரும்பாலானவர்களின் முன்னுரிமை குடும்பம்தான் என்று நான் நினைக்கிறேன். இதனால் விராட் கோலியை தவறாக மதிப்பிடக்கூடாது. அவரது ஆட்டத்தை நாம் தவறவிட்டாலும் அவர் எடுத்து இருக்கும் முடிவு சரியானதுதான்' என்று கூறினார்.


Next Story