இந்தியாவுக்கு எதிரான தோல்வி - மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுத நசீம் ஷா


இந்தியாவுக்கு எதிரான தோல்வி - மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுத நசீம் ஷா
x

Image Courtesy: AFP / X (Twitter)

வெற்றியின் அருகில் வரை வந்தும் வெற்றி பெற முடியவில்லையே என்ற வேதனையில் நசீம் ஷா மைதானத்திலே கண்ணீர் விட்டு அழுதார்.

நியூயார்க்,

20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய நேரப்படி நேற்று இரவு 8 மணிக்கு நியூயார்க்கில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 42 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 120 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் 6 ரன் வித்தியாசத்தில் இந்தியா திரில் வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஜஸ்ப்ரீத் பும்ரா 3 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த ஆட்டத்தில் ஒரு கட்டத்தில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணி கடைசி கட்டத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு கடைசி 4 பந்துகளில் 17 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது, 8-வது விக்கெட்டுக்கு உள்ளே வந்த நசீம் ஷா இரண்டு பவுண்டரிகளை விளாசினார். ஆனால், அவரால் எஞ்சிய 6 ரன்களை எடுக்க முடியவில்லை.

இதனால், வெற்றியின் அருகில் வரை வந்தும் வெற்றி பெற முடியவில்லையே என்ற வேதனையில் நசீம் ஷா மைதானத்திலே கண்ணீர் விட்டு அழுதார். அவரை சக பேட்ஸ்மேனான ஷாகின் அப்ரிடி ஆறுதல் கூறி தேற்றினார். தோல்வியால் மிகுந்த வருத்தத்தில் இருந்த நசீம் ஷாவுக்கு இந்திய கேப்டன் ரோகித் சர்மா ஆறுதல் கூறினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.




Next Story