இங்கிலாந்து-ஆஸ்திரேலியா ஆஷஸ் டெஸ்ட்: 2-வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது


இங்கிலாந்து-ஆஸ்திரேலியா ஆஷஸ் டெஸ்ட்: 2-வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது
x

Image Courtesy : @englandcricket twitter

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் இங்கிலாந்து 283 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.

லண்டன்,

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவலில் நேற்று தொடங்கியது. ஆஸ்திரேலிய அணியில் ஒரே ஒரு மாற்றமாக ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீனுக்கு பதிலாக டாட் மர்பி சேர்க்கப்பட்டார். 'டாஸ்' ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 73 ரன்னுக்குள் பென் டக்கெட் (41 ரன்), ஜாக் கிராவ்லி (22 ரன்), ஜோ ரூட் (5 ரன்) ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன் பின்னர் மொயீன் அலியும், ஹாரி புரூக்கும் கைகோர்த்து அதிரடியாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஸ்கோர் 184-ஐ எட்டிய போது மொயீன் அலி 34 ரன்னில் ஆட்டமிழந்தார். ஹாரி புரூக் 85 ரன்கள் (91 பந்து, 11 பவுண்டரி, 2 சிக்சர்) நொறுக்கினார். கேப்டன் பென் ஸ்டோக்ஸ் (3 ரன்), பேர்ஸ்டோ (4 ரன்) நிலைக்கவில்லை. பின்வரிசையில் கிறிஸ் வோக்ஸ் (36 ரன்), மார்க்வுட் (28 ரன்) அணி 250 ரன்களை கடக்க உதவினர்.

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில 54.4 ஓவர்களில் 283 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. ஆஸ்திரேலிய தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டும், ஹேசில்வுட், டாட் மர்பி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 61 ரன்கள் எடுத்துள்ளது. தொடர்ந்து இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.


Next Story