முதலாவது டெஸ்ட்; வார்னர் மிரட்டல் சதம்...முதல் நாளில் ஆஸ்திரேலிய அணி 346 ரன்கள் குவிப்பு..!


முதலாவது டெஸ்ட்; வார்னர் மிரட்டல் சதம்...முதல் நாளில் ஆஸ்திரேலிய அணி 346 ரன்கள் குவிப்பு..!
x

image courtesy; twitter/ @ICC

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது

பெர்த்,

ஷான் மசூத் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதனையடுத்து ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய வார்னர் மற்றும் கவாஜா சிறப்பாக விளையாடி அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தனர்.

முதல் விக்கெட்டுக்கு 126 ரன்கள் அடித்த நிலையில் கவாஜா 41 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய மார்னஸ் லாபுசாக்னே 16 ரன்களில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். அதன்பின் வார்னருடன் ஜோடி சேர்ந்த சுமித் சிறிது நேரம் நிலைத்து விளையாடி 31 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய டேவிட் வார்னர் சதமடித்து அசத்தினார்.

சதமடித்த பின்பும் சிறப்பாக விளையாடிய வார்னருக்கு ஹெட் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். ஹெட் தனது பங்குக்கு 40 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய வார்னர் 164 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார்.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 84 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 346 ரன்கள் குவித்துள்ளது. மிட்செல் மார்ஷ் 15 ரன்களுடனும், அலேக்ஸ் கேரி 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

பாகிஸ்தான் அணி தரப்பில் அதிகபட்சமாக அமீர் ஜமால் 2 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இந்நிலையில் நாளை 2-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.


Next Story