சிராஜ் அபார பந்துவீச்சு...!! 6 விக்கெட்டுகளை இழந்து திணறும் இலங்கை அணி..!

image courtesy; twitter/@BCCI
ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் பவர்பிளே முடிவதற்குள் சிராஜ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தி உள்ளார்.
கொழும்பு,
16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 30-ந் தேதி தொடங்கியது. 6 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் லீக் சுற்று முடிவில் ஆப்கானிஸ்தான், நேபாளம் அணிகள் வெளியேற்றப்பட்டன.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய 4 அணிகள் சூப்பர்4 சுற்றுக்குள் நுழைந்தன. சூப்பர்4 சுற்று முடிவில் இந்தியா முதலிடமும், இலங்கை 2-வது இடமும் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறின.இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் மோதுகின்றன. இதையடுத்து இறுதிப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில் மழை காரனமாக இந்த ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மழை நின்றதை அடுத்து ஆட்டம் ஆரம்பமாகி உள்ளது. அதன்படி இலங்கை முதலில் பேட்டிங் செய்து விளையாடி வருகிறது. இதில் ஆட்டம் தொடங்கிய முதல் ஓவரிலேயே பும்ரா அபாரமாக பந்து வீசி குசல் பெராரே விக்கெட்டை வீழ்த்தினார்.
இதன் பின்னர் முகமது சிராஜ் வீசிய ஆட்டத்தின் 4-வது ஓவரில் இலங்கை அணி வீரர்கள் நிசாங்கா, சமரவிக்ரம, அசலன்கா மற்றும் தனஞ்சயா டி சில்வா 4 பேரின் விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். மேலும் தனது அடுத்த ஓவரில் இலங்கை அணி கேப்டன் தசுன் ஷனகா விக்கெட்டை வீழ்த்தினார். இதன் மூலம் சிராஜ் பவர்பிளே முடிவதற்குள் 5 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தியுள்ளார். தற்போது வரை இலங்கை அணி 6 ஓவர்களில் 13 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.