பாகிஸ்தானுக்கு எதிராக 5 விக்கெட் வீழ்த்தியதை நான் எப்போதும் நினைவில் கொள்வேன்: குல்தீப் யாதவ்


பாகிஸ்தானுக்கு எதிராக 5 விக்கெட் வீழ்த்தியதை நான் எப்போதும் நினைவில் கொள்வேன்: குல்தீப் யாதவ்
x

image courtesy; AFP

தினத்தந்தி 12 Sep 2023 10:57 AM GMT (Updated: 12 Sep 2023 11:06 AM GMT)

பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

கொழும்பு,

ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 24.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 147 ரன்கள் எடுத்து இருந்த போது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இந்த ஆட்டத்துக்கு மாற்று நாள் (ரிசர்வ் டே) ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்ததால் பாதியில் நின்று போன ஆட்டம் நேற்று நடைபெற்றது.

இதில் தொடர்ந்து பேட்டிங் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 356 ரன்கள் குவித்தது. கோலி 122 ரன்கள், ராகுல் 111 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இதையடுத்து 357 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணி 32 ஓவர்களில் 128 ரன்களில் அடங்கியது. ஹாரிஸ் ரவுப், நசீம் ஷா காயத்தால் பேட் செய்யவில்லை. இதன் மூலம் இந்தியா 228 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பெற்றது. குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

இந்த ஆட்டம் முடிவடைந்ததும் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய குல்தீப், "நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஒரு நல்ல அணிக்கு எதிராக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்துவது எப்போதும் நினைவில் இருக்கும். நான் கிரிக்கெட்டை நிறுத்திவிட்டு ஓய்வு பெறும்போது, பாகிஸ்தானுக்கு எதிராக ஐந்து விக்கெட்டுகளை எடுத்ததை நான் எப்போதும் நினைவில் கொள்வேன்'' என்று கூறினார்.


Next Story