'நாட்டுக்காக விளையாடாமல் தம்முடைய சொந்த சாதனைக்காக விளையாடினால் தோல்விதான் கிடைக்கும்'-கவுதம் கம்பீர் விமர்சனம்


நாட்டுக்காக விளையாடாமல் தம்முடைய சொந்த சாதனைக்காக விளையாடினால் தோல்விதான் கிடைக்கும்-கவுதம் கம்பீர் விமர்சனம்
x
தினத்தந்தி 16 Oct 2023 6:18 AM GMT (Updated: 16 Oct 2023 9:30 AM GMT)

நாட்டுக்காக விளையாடாமல் தம்முடைய சொந்த சாதனைக்காக விளையாடினால் தோல்விதான் கிடைக்கும் என்று பாபர் அசாமை இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் விமர்சித்துள்ளார்.

அகமதாபாத்,

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற 12-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா தங்களுடைய 3-வது வெற்றியை பதிவு செய்தது. அகமதாபாத்தில் நடைபெற்ற அந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியா வெற்றி பெறுவதற்கு வெறும் 192 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயித்தது.

அதை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 86 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 53 ரன்களும் விளாசி அணியை வெற்றி பெற வைத்து புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடிப்பதற்கு உதவினார்கள். 50 ஓவர் உலகக்கோப்பை வரலாற்றில் தொடர்ந்து 8-வது முறையாக பாகிஸ்தானை தோற்கடித்து இந்தியா தங்களுடைய வெற்றி சரித்திரத்தை தக்க வைத்து கொண்டது.

இந்நிலையில் பாபர் மற்றும் ரிஸ்வான் ஆகிய இருவரில் ஒருவர் கூட அதிரடியாக விளையாடாமல் தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியதே தோல்விக்கு காரணம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் விமர்சித்துள்ளார். அதிலும் நாட்டுக்காக விளையாடாமல் அரை சதமடிக்க வேண்டும் என்ற தம்முடைய சொந்த சாதனைக்காக விளையாடினால் தோல்விதான் கிடைக்கும் என்று பாபர் அசாமை விமர்சிக்கும் அவர் இது குறித்து பேசியது பின்வருமாறு.

"பாபர் அசாம் மெதுவாக விளையாடினார். பொதுவாக 2 பேட்ஸ்மேன்கள் ஒரே மாதிரி விளையாடி பார்ட்னர்ஷிப் அமைக்காமல் ஒருவர் அடித்து ஆட வேண்டும். ஒருவேளை நீங்கள் உங்களுடைய சொந்த சாதனைக்காக விளையாடினால் இது போன்ற முடிவுகள்தான் கிடைக்கும். குறிப்பாக பாபர் அசாம் பொதுவாக நிறைய ரன்களை தனக்காக அடிக்கிறார். ஆனால் பாகிஸ்தான் வரலாற்றில் எப்போதுமே ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடி நல்ல துவக்கத்தை பெறுவதையே விரும்புவார்கள். அதை ஷாஹித் அப்ரிடி, இம்ரான் நசீர் ஆகியோர் மிடில் ஆர்டரில் அப்படியே எடுத்துச் செல்வார்கள். ஆனால் தற்போதைய பாகிஸ்தான் அணியில் டாப் 3 இடங்களில் ஒருவர் கூட அதிரடியாக விளையாட முயற்சிக்கவில்லை" என்று கூறியுள்ளார்.


Next Story