ஆப்கானிஸ்தான் டி20 தொடரில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா படைக்க உள்ள வரலாற்று சாதனைகள்..!
இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான முதலாவது டி20 ஆட்டம் நாளை நடைபெற உள்ளது.
புதுடெல்லி,
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஆட்டம் நாளை நடைபெற உள்ளது.
இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் கேப்டனாக ரோகித் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் விராட் கோலி மீண்டும் டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
ஏனெனில் நீண்ட காலம் கழித்து இருவரும் டி20 அணிக்கு திரும்பி உள்ளனர். அந்த நிலைமையில் தற்போது மீண்டும் தேர்வாகியுள்ள அவர்கள் இந்தாண்டு நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பையில் விளையாடுவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.
அந்த வகையில் மீண்டும் கிடைத்த இந்த வாய்ப்பில் ரோகித் சர்மா கேப்டனாக படைக்க உள்ள சில சாதனைகளைப் பற்றி பார்ப்போம்.
1. இதுவரை டி20 கிரிக்கெட்டில் 51 போட்டிகளில் 39 வெற்றிகளை 76.74% என்ற அபாரமான விகிதத்தில் ரோகித் சர்மா பதிவு செய்துள்ளார். அந்த வரிசையில் இந்த தொடரில் 3 போட்டிகளிலும் வெற்றியை பதிவு செய்யும் பட்சத்தில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை பதிவு செய்த கேப்டன் என்ற உலக சாதனையை ரோகித் சர்மா சமன் செய்வதற்கு பிரகாசமான வாய்ப்புள்ளது.
அந்த பட்டியல்:
1. பாபர் அசாம்/அஸ்கர் ஆப்கன்/இயன் மோர்கன்/பிரையன் மசாபா: தலா 42
2. எம்எஸ் தோனி; 41
3. ஆரோன் பின்ச் : 40
4. ரோஹித் சர்மா : 39
2. மேலும் ரோகித் இந்த தொடரில் 44 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த இந்திய கேப்டன் என்ற விராட் கோலியின் சாதனையை உடைத்து ரோகித் சர்மா புதிய சாதனை படைப்பதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
அந்த பட்டியல்:
1. விராட் கோலி : 1,570
2. ரோகித் சர்மா : 1,527
3. எம்எஸ் தோனி : 1,112