ஐ.பி.எல். கிரிக்கெட்: குஜராத் அணி 5-வது வெற்றி.. மும்பையை வீழ்த்தியது
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பையை வீழ்த்தி குஜராத் அணி 5-வது வெற்றியை பெற்றது.
ஆமதாபாத்,
ஐ.பி.எல். கிரிக்கெட்
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த 35-வது லீக்கில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்சை எதிர்கொண்டது.
'டாஸ்' ஜெயித்த மும்பை கேப்டன் ரோகித் சர்மா முதலில் குஜராத்தை பேட் செய்ய பணித்தார். இதையடுத்து சுப்மன் கில்லும், விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹாவும் குஜராத்தின் இன்னிங்சை தொடங்கினர். சஹா (4 ரன்), அடுத்து வந்த கேப்டன் ஹர்திக் பாண்ட்யா (13 ரன்), விஜய் சங்கர் (19 ரன்) அதிக நேரம் நிலைக்கவில்லை. மறுமுனையில் சூப்பராக ஆடி அரைசதம் கடந்த சுப்மன் கில் 56 ரன்களில் (34 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) வெளியேறினார். அப்போது குஜராத் 4 விக்கெட்டுக்கு 101 ரன்களுடன் (12.2 ஓவர்) சற்று தடுமாற்றத்திற்குள்ளானது.
இந்த சிக்கலான சூழலில் 5-வது விக்கெட்டுக்கு டேவிட் மில்லரும், அபினவ் மனோகரும் கூட்டணி அமைத்து மும்பையின் பந்து வீச்சை புரட்டியெடுத்தனர். இதனால் ஸ்கோர் மளமளவென எகிறியது. இவர்கள் கூட்டாக 36 பந்துகளில் 71 ரன்கள் திரட்டி ரசிகர்களுக்கு விருந்து படைத்தனர். அபினவ் மனோகர் 42 ரன்களில் (21 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) கேட்ச் ஆனார்.
207 ரன் குவிப்பு
இதன் பின்னர் மில்லருடன், ராகுல் திவேதியா இணைந்தார். இருவரும் ேவகப்பந்து வீச்சாளர் மெரிடித்தின் ஒரே ஓவரில் 3 சிக்சர்கள் பறக்க விட்டு அசத்தினர். தொடர்ந்து கடைசி ஓவரில் திவேதியா இரு சிக்சர் விரட்டி ஸ்கோர் 200-ஐ கடக்க உதவினார். மில்லர் 46 ரன்களில் (22 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்) கேட்ச் ஆனார்.
20 ஓவர் முடிவில் குஜராத் அணி 6 விக்ெகட்டுக்கு 207 ரன்கள் குவித்தது. அந்த அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். திவேதியா 20 ரன்களுடனும் (5 பந்து, 3 சிக்சர்), ரஷித்கான் 2 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். மும்பை தரப்பில் பியுஷ் சாவ்லா 2 விக்கெட்டும், அர்ஜூன் தெண்டுல்கர், பெரன்டோர்ப், மெரிடித், குமார் கார்த்திகேயா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
குஜராத் வெற்றி
அடுத்து 208 ரன்கள் இலக்கை நோக்கி மும்பை அணி ஆடியது. தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமான ரோகித் சர்மா (2 ரன்) 2-வது ஓவரிலேயே வீழ்ந்தார். அவர் ஹர்திக் பாண்ட்யாவின் பந்து வீச்சில் அவரிடமே பிடிபட்டார். மற்றொரு தொடக்க வீரர் இஷான் கிஷன் (13 ரன்), மாற்று ஆட்டக்காரர் திலக் வர்மா (2 ரன்) இருவரையும் ஒரே ஓவரில் சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் காலி செய்தார். இந்த வீழ்ச்சியில் இருந்து மும்பை அணியால் நிமிர முடியவில்லை.
கேமரூன் கிரீன் (33 ரன்), சூர்யகுமார் யாதவ் (23 ரன்) இருவரையும் மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் நூர் அகமது வெளியேற்றினார். அத்துடன் மும்பையின் நம்பிக்கையும் சிதைந்தது. பின்வரிசையில், நேஹல் வதேரா 40 ரன்கள் ( 21 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசியதும், ஜாம்பவான் தெண்டுல்கரின் மகன் அர்ஜூன் (6 பந்தில் 13 ரன்) ஒரு சிக்சர் விரட்டியதும் கவனத்தை ஈர்த்தது.
20 ஓவர் முழுமையாக ஆடிய மும்பை அணி 9 விக்கெட்டுக்கு 152 ரன்களே எடுத்தது. இதன் மூலம் குஜராத் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நூர் அகமது 3 விக்கெட்டும், மொகித் ஷர்மா, ரஷித்கான் தலா 2 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
7-வது லீக்கில் ஆடிய குஜராத்துக்கு இது 5-வது வெற்றியாகும். மும்பைக்கு 4-வது தோல்வியாகும்.
''குஜராத் சுழற்பந்து வீச்சாளர்கள் நூர் அகமது 4 ஓவர்களில் 37 ரன் வழங்கி 3 விக்கெட்டும், ரஷித்கான் 27 ரன்னுக்கு 2 விக்கெட்டும் கபளீகரம் செய்தனர். மும்பை அணியை சீர்குலைய வைத்த இவ்விரு சுழற்பந்து வீச்சாளர்களும் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்கள் ஆவர்''