ஐபிஎல்: பெங்களூருவை வீழ்த்தி மும்பை அபாரவெற்றி... புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்


ஐபிஎல்: பெங்களூருவை வீழ்த்தி மும்பை அபாரவெற்றி... புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்
x

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று நடந்த ஆட்டத்தில் பெங்களூருவுக்கு பதிலடி கொடுத்து மும்பை அணி 6-வது வெற்றி பெற்றது.

மும்பை,

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த 54-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சுடன் மோதியது.

மும்பை அணியில் ஜோப்ரா ஆர்ச்சருக்கு பதிலாக கிறிஸ் ஜோர்டான் அறிமுக வீரராக இடம் பிடித்தார். பெங்களூரு அணியில் கரண் ஷர்மா நீக்கப்பட்டு விஜய்குமார் வைஷாக் சேர்க்கப்பட்டார்.

'டாஸ்' ஜெயித்த மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பீல்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. முதல் ஓவரில் பெரன்டோர்ப் பந்து வீச்சில் தொடக்க ஆட்டக்காரர் விராட் கோலி (1 ரன்) அடித்த பந்தை விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் பிடித்தார். நடுவர் கைவிரலை உயர்த்த மறுத்ததால் கேப்டன் ரோகித் சர்மா அப்பீல் செய்து சாதகமான முடிவை பெற்றார். அடுத்து வந்த அனுஜ் ராவத் (6 ரன்) பெரன்டோர்ப் பந்து வீச்சில் ஸ்கூப் ஷாட் ஆடி கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். இதனால் அந்த அணி 16 ரன்னுக்குள் 2 விக்கெட்டுகளை (2.2 ஓவரில்) இழந்து தடுமாறியது.

மேக்ஸ்வெல், பிளிஸ்சிஸ் அரைசதம்

இந்த இக்கட்டான சூழலில் மேக்ஸ்வெல், கேப்டன் பிளிஸ்சிசுடன் இணைந்தார். பேட்டிங்குக்கு அனுகூலமான ஆடுகளத்தை சரியாக பயன்படுத்தி இருவரும் வேகமாக மட்டையை சுழற்றினர். பவுண்டரியுடன் தனது ரன் கணக்கை தொடங்கிய மேக்ஸ்வெல் சூறாவளியாக சுழன்றடித்தார். சுழற்பந்து மற்றும் வேகப்பந்து வீச்சில் சிக்சர்களை பறக்கவிட்டு கலக்கிய மேக்ஸ்வெல் 25 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நடப்பு தொடரில் அவர் அடித்த 4-வது அரைசதம் இதுவாகும். 9.3 ஓவர்களில் அந்த அணி 100 ரன்னை கடந்தது.

மறுமுனையில் நேர்த்தியாகவும், ஏதுவான பந்துகளை எல்லைக்கோட்டுக்கு விரட்டி வேகமாக ரன் வேட்டையாடிய பிளிஸ்சிஸ் 30 பந்துகளில் அரைசத்தை எட்டினார். ரன் கணக்கை தொடங்கும் முன்பு கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பிய பிளிஸ்சிஸ் இந்த சீசனில் அடித்த 6-வது அரைசதம் இது என்பது குறிப்பிடத்தக்கது. அணியின் ஸ்கோர் 136 ரன்னாக உயர்ந்த போது இந்த ஜோடி பிரிந்தது. மேக்ஸ்வெல் 68 ரன்னில் (33 பந்து, 8 பவுண்டரி, 4 சிக்சர்) பெரன்டோர்ப் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 3-வது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 120 ரன்கள் சேர்த்தனர். இதையடுத்து களம் கண்ட மஹிபால் லோம்ரோர் ஒரு ரன்னில் போல்டு ஆகி ஏமாற்றம் அளித்தார்.

200 ரன் இலக்கு

பொறுப்புடன் ஆடிய பிளிஸ்சிஸ் 65 ரன்னில் (41 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) கேமரூன் கிரீன் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். அதன் பிறகு அந்த அணியின் ரன்வேகம் சற்று தளர்ந்தது. 14 ரன்னில் இருக்கையில் கேட்ச் வாய்ப்பில் இருந்து தப்பிப்பிழைத்த தினேஷ் கார்த்திக் 30 ரன்னில் (18 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) கிறிஸ் ஜோர்டான் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 20 ஓவர்களில் பெங்களூரு அணி 6 விக்கெட்டுக்கு 199 ரன்கள் குவித்தது. கேதர் ஜாதவ் 12 ரன்னுடனும், ஹசரங்கா 12 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். மும்பை தரப்பில் பெரன்டோர்ப் 3 விக்கெட்டும், கேமரூன் கிரீன், கிறிஸ் ஜோர்டான், குமார் கார்த்திகேயா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரராக களம் கண்ட கேப்டன் ரோகித் சர்மா 7 ரன்னில் ஹசரங்கா சுழலில் எல்.பி.டபிள்யூ. ஆகி மீண்டும் ஏமாற்றம் அளித்தார். அதிரடி காட்டிய மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷன் (42 ரன்கள், 21 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்) விக்கெட்டையும் ஹசரங்கா கபளீகரம் செய்தார். அப்போது அணியின் ஸ்கோர் 52 ரன்னாக (5 ஓவரில்) இருந்தது.

சூர்யகுமார் அசத்தல்

இதனையடுத்து நேஹல் வதேரா, சூர்யகுமார் யாதவுடன் கைகோர்த்தார். சூர்யகுமார் அதிரடி காட்ட, மறுமுனையில் வதேராவும் அருமையாக ஆடினார். இருவரும் அணியை வெற்றியை நோக்கி வேகமாக நகர்த்தினர். 26 பந்துகளில் அரைசதத்தை எட்டிய சூர்யகுமார் யாதவ் 83 ரன்னில் (35 பந்து, 7 பவுண்டரி, 6 சிக்சர்) விஜய்குமார் வைஷாக் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இந்த சீசனில் 4-வது அரைசதம் அடித்த சூர்யகுமார் ஐ.பி.எல். போட்டியில் எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

அடுத்து வந்த டிம் டேவிட் முதல் பந்திலேயே ஆட்டம் இழந்தார். நேஹல் வதேரா சிக்சர் விளாசி அணி வெற்றி இலக்கை கடக்க வைத்ததுடன் தொடர்ச்சியாக தனது 2-வது அரைசதத்தை பூர்த்தி செய்தார். 16.3 ஓவர்களில் மும்பை அணி 4 விக்கெட்டுக்கு 200 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நேஹல் வதேரா 52 ரன்னுடனும் (34 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்), கேமரூன் கிரீன் 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். பெங்களூரு தரப்பில் ஹசரங்கா, விஜய்குமார் வைஷாக் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

மும்பை அணி 6-வது வெற்றி

11-வது ஆட்டத்தில் ஆடிய மும்பை அணி 6-வது வெற்றியை பெற்றதுடன் முந்தைய ஆட்டத்தில் பெங்களூருவிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேறியது. பெங்களூரு அணி சந்தித்த 6-வது தோல்வி இதுவாகும்.


Next Story