'சதம் அடித்தது ஒரு உணர்ச்சிகரமான தருணம்'- ஜெய்ஸ்வால் ...!!


சதம் அடித்தது ஒரு உணர்ச்சிகரமான தருணம்-  ஜெய்ஸ்வால் ...!!
x

image courtesy;twitter/@ICC

தனது அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்து அசத்திய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 'இது ஒரு உணர்ச்சிகரமான தருணம்’ என்று கூறி உள்ளார்.

டொமினிகா,

வெஸ்ட் இண்டீசுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. முதலாவது டெஸ்ட் டொமினிகாவில் நடைபெறுகிறது. இதில் 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள், இந்திய பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 150 ரன்களில் ஆல்அவுட் ஆனது.இந்திய அணி தரப்பில் அஸ்வின் 5 விக்கெட்டுகள் விழ்த்தினார்.

அதன்பின் தனது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் கேப்டன் ரோஹித் ஷர்மா களம் இறங்கினர்.இருவரும் வெஸ்ட்இண்டீஸ் பந்து வீச்சை சிரமமின்றி சமாளித்தனர்.அபாரமாக ஆடிய இருவரும் சதமடித்து அசத்தினர்.

அதிலும் ஜெய்ஸ்வால் தனது அறிமுக போட்டியிலேயே சதம் அடித்து உள்ளார்.மும்பையைச் சேர்ந்த 21 வயதான ஜெய்ஸ்வால் அறிமுக டெஸ்டிலேயே சதம் நொறுக்கிய 17-வது இந்தியர் என்ற மகத்தான சாதனை பட்டியலிலும் இணைந்தார்.

மறுமுனையில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் ரோகித் சர்மா 10 பவுண்டரி, 2 சிக்சருடன் தனது சதத்தை பதிவு செய்திருந்தநிலையில் 103 ரன்களுக்கு கேட்ச் ஆகி வெளியேறினார்.

தற்போது ஜெய்ஸ்வால் 143 ரன்களுடனும், விராட் கோலி 36 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

சதம் அடித்த தருணம் குறித்து பேசிய ஜெய்ஸ்வால்,' இது ஒரு உணர்ச்சிகரமான தருணம் [100 ஐப் பெறுகிறது]. எனது பேட்டிங் இன்னும் தொடர்கிறது, எனவே முடிந்தவரை அணிக்காக விளையாட முயற்சி செய்வேன்" என்று ஜெய்ஸ்வால் கூறினார். "இது எனது கேரியரின் தொடக்கமாகும். எனவே முடிந்தவரை எவ்வளவு கவனம் செலுத்துகிறேன் என்பதைப் பார்க்க முயற்சிப்பேன்' என்று கூறினார்.

மேலும் அவர் "இது எனக்கும், எனது குடும்பத்துக்கும் மிகவும் உணர்ச்சிகரமானதாக இருந்தது. இது எனக்கு நீண்ட பயணம். என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இந்த சதத்தை என் பெற்றோருக்கு சமர்ப்பிக்கிறேன்.ஏனென்றால், அவர்கள் என் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.மேலும் நான் கடவுளுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். அதிகம் பேச விரும்பவில்லை... நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஆனால் இதுவே என் ஆரம்பம். நான் தொடர்ந்து சிறப்பானவனாக இருக்க வேண்டும் " என்று கூறி உள்ளார்.

ஜெய்ஸ்வால்- ரோஹித் பார்ட்னர்ஷிப் கூறித்து அவர் கூறும் போது;

"பேட்டிங் செய்யும் போது ரோஹித்திடம் நிறைய பேசினேன். இந்த விக்கெட்டில் எப்படி பேட்டிங் செய்ய வேண்டும். எங்கே ரன்கள் வரும் என்பதை அவர் எனக்கு விளக்கிக்கொண்டே இருந்தார். எங்களுக்கு இடையே நல்ல தொடர்பு இருந்தது" என்று ஜெய்ஸ்வால் கூறினார்.

" அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் மற்றும் ஜாம்பவான்கள் (ரோஹித், விராட், ரஹானே போன்றவர்கள்) உடன் அமர்ந்து பேசும்போது நிறைய ஆலோசனைகள் கிடக்கிறது. அவர்களிடமிருந்து நான் கற்றுக் கொண்டே இருப்பதால் இது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது" என்று ஜெய்ஸ்வால் மேலும் கூறினார்.

ஜெய்ஸ்வால் இன்னும் 45 ரன்கள் எடுத்தால் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அறிமுக போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைப்பார். இதற்கு முன்னர் ஷிகர் தவான் தனது டெஸ்ட் அறிமுக போட்டியில் 187 ரன்கள் எடுத்ததே சாதனையாக உள்ளது.


Next Story