விராட் கோலியுடன் இணைந்து விளையாடியது எனக்கு கிடைத்த கவுரவம் - ஜெய்ஸ்வால்


விராட் கோலியுடன் இணைந்து விளையாடியது எனக்கு கிடைத்த கவுரவம் - ஜெய்ஸ்வால்
x

image courtesy; twitter/@BCCI

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் ஜெய்ஸ்வால் 68 ரன்கள் குவித்தார்.

இந்தூர்,

இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய ஆப்கானிஸ்தான அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி 15.4 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 173 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் அதிரடியாக ஆடிய ஜெய்ஸ்வால் 68 ரன், ஷிவம் துபே 63 ரன் எடுத்தனர்.

இந்நிலையில் விராட் கோலியுடன் இணைந்து விளையாடியது தமக்கு கிடைத்த கவுரவமான வாய்ப்பு என்று ஜெய்ஸ்வால் கூறியுள்ளார். மேலும் விராட் கோலியிடம் இருந்து நிறைய நுணுக்கங்களை கற்றுக்கொண்டதாகவும் தெரிவிக்கும் அவர் இது குறித்து போட்டியின் முடிவில் பேசியது பின்வருமாறு;-

"இந்த போட்டியில் களத்திற்கு சென்று மகிழ்ச்சியுடன் விளையாடினேன். குறிப்பாக விராட் பையாவுடன் பேட்டிங் செய்தது சிறந்த தருணமாகும். அவருடன் சேர்ந்து பேட்டிங் செய்தது கவுரவமாகும். அவரிடமிருந்து நான் நிறையவற்றை கற்றுக்கொண்டுள்ளேன். நாங்கள் சேர்ந்து பேட்டிங் செய்யும்போது எங்கே அடிக்கலாம் என்பது பற்றி பேசினோம். பின்னர் லாங் ஆன் மற்றும் மிட் ஆப் திசைக்கு மேல் எளிதாக அடிக்கலாம் என்று நாங்கள் முடிவு செய்து அடித்தோம்.

அந்த வகையில் எங்களுடைய எண்ணம் நேர்மறையாக இருந்ததால் நாங்கள் நல்ல ஷாட்டுகளை அடிக்க முயற்சித்தோம். களத்திற்கு சென்று என்னுடைய இயற்கையான ஆட்டத்தை வெளிப்படுத்துமாறு அணி நிர்வாகம் என்னிடம் கூறினார்கள். வலைப்பயிற்சிகளில் கடினமாக உழைக்கும் நான் இதுபோல் கிடைக்கும் வாய்ப்புகளில் என்னுடைய சிறந்த செயல்பாட்டை கொடுக்க விரும்புகிறேன். இந்த போட்டியில் பனியின் தாக்கம் இருந்தபோது இரண்டாவதாக பேட்டிங் செய்த முடிவு நல்லதாக அமைந்தது" என்று கூறினார்.


Next Story