ஒருநாள் கிரிக்கெட்: இங்கிலாந்தை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி


ஒருநாள் கிரிக்கெட்: இங்கிலாந்தை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி
x

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஆன்டிகுவா,

ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டம் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் உள்ள விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 50 ஓவரில் 325 ரன் எடுத்து ஆல் ஆவுட் ஆனது. அதிகபட்சமாக ஹாரி புரூக் 71 ரன்னும், ஜாக் கிரவ்லி 48 ரன்னும், பில் சால்ட் 45 ரன்னும், சாம் கர்ரன் 38 ரன்னும் எடுத்தனர்.

பின்னர் 326 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அலிக் அதான்சி, பிரன்டன் கிங் நல்ல அடித்தளம் அமைத்தனர். அலிக் அதான்சி 66 ரன்னிலும், பிரன்டன் கிங் 35 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து வந்த கார்டி 16 ரன்னில் ஆட்டம் இழந்தார். நான்காவது வீரராக களமிறங்கிய ஷாய் ஹோப் பொறுப்புடன் நிலைத்து நின்று ஆடி 16-வது சதம் அடித்ததுடன் அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

48.5 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கடைசி 4 பந்துகளில் 3 சிக்சர் விளாசிய ஷாய் ஹோப் 109 ரன்னுடனும் (83 பந்து, 4 பவுண்டரி, 7 சிக்சர்), அல்ஜாரி ஜோசப் 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இவ்விரு அணிகளுக்கிடையிலான 2-வது ஒரு நாள் போட்டி இதே மைதானத்தில் 6-ந்தேதி நடைபெறுகிறது.


Next Story