வங்காளதேசத்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்: நியூசிலாந்து அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மிர்புர்,
நியூசிலாந்து கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட்ட நிலையில் நியூசிலாந்து-வங்காளதேசம் அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மிர்புரில் நேற்று நடந்தது. 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 36 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
ஹென்றி நிகோல்ஸ் (49 ரன்கள்), விக்கெட் கீப்பர் டாம் பிளன்டெல் (68 ரன்கள்) ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் சரிவில் இருந்து மீண்ட நியூசிலாந்து அணி 49.2 ஓவர்களில் 254 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. வங்காளதேசம் தரப்பில் கலீல் அகமது, மெஹிதி ஹசன் தலா 3 விக்கெட்டும், முஸ்தாபிஜூர் ரகுமான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 255 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வங்காளதேச அணி, நியூசிலாந்து வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 41.1 ஓவர்களில் 168 ரன்னில் சுருண்டது. இதனால் நியூசிலாந்து அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக மக்முதுல்லா 49 ரன்னும், தமிம் இக்பால் 44 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தனர்.
நியூசிலாந்து தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் சோதி 39 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை அள்ளினார். ஒருநாள் போட்டியில் அவரது சிறந்த பந்து வீச்சு இதுவாகும். 35 ரன்னுடன் 6 விக்கெட்டும் எடுத்த நியூசிலாந்து பவுலர் சோதி ஆட்டநாயகன் விருது பெற்றார். சோதி 17 ரன் எடுத்த நிலையில் எதிர்முனையில் நிற்கையில் பந்து வீசும் முன்பே கிரீசை விட்டு முன்னோக்கி சென்றதால் வங்காளதேச வேகப்பந்து வீச்சாளர் ஹசன் மக்முத்தால் ரன்-அவுட் செய்யப்பட்டார். அது 3-வது நடுவரிடம் அப்பீல் செய்யப்பட்டு அவுட் வழங்கப்பட்டது.
இதனையடுத்து பெவிலியன் நோக்கி நடையை கட்டிய சோதியை பவுண்டரி எல்லை அருகில் சென்ற போது மீண்டும் பேட்டிங் செய்ய வருமாறு வங்காளதேச அணியின் கேப்டன் லிட்டான் தாஸ் அழைத்தார். அவர் திரும்ப வந்து மேலும் 18 ரன்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வருகிற 26-ந் தேதி நடக்கிறது.