ஆஸ்திரேலியாவை அவர்கள் சொந்த மண்ணில் பாகிஸ்தான் அணியால் வீழ்த்த முடியும் - ஹபீஸ் நம்பிக்கை


ஆஸ்திரேலியாவை அவர்கள் சொந்த மண்ணில் பாகிஸ்தான் அணியால் வீழ்த்த முடியும் - ஹபீஸ் நம்பிக்கை
x

image courtesy; AFP

பாகிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

பெர்த்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று முடிவடைந்தது. இதில் ஆஸ்திரேலிய அணி 360 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இதையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி வரும் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவை அவர்கள் சொந்த மண்ணில் பாகிஸ்தான் அணியால் வீழ்த்த முடியும் என்று அந்த அணியின் இயக்குனர் முகமது ஹபீஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "எங்கள் வீரர்களிடம் திறமை இருக்கிறது. அதை இங்கே நடைபெற்ற வலைப்பயிற்சியில் நான் பார்த்தேன். அதனால் எங்களால் ஆஸ்திரேலியாவை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்த முடியும். நாங்கள் எங்களுடைய திட்டங்களை பின்பற்றவில்லை. ஆனால் நான் எங்கள் வீரர்கள் மீது இப்போதும் நம்பிக்கை வைத்துள்ளேன். ஆஸ்திரேலிய மண்ணில் பாகிஸ்தானால் தொடரை வெல்ல முடியும். ஆனால் அதற்கு எங்களுடைய திட்டங்களை துல்லியமாக செயல்படுத்த வேண்டும்.

நாங்கள் அதற்கான திட்டங்களுடன் களமிறங்கிய போதிலும் முதல் போட்டியில் அதைப் பின்பற்றி விளையாடுவதில் தோல்வியை சந்தித்தோம். இருப்பினும் அந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவை நாங்கள் பின்னோக்கி தள்ளிய தருணங்களும் இருந்தன. எங்களுடைய திட்டத்தை செயல்படுத்துவதில் மட்டுமே தடுமாற்றம் இருக்கிறது" என்று கூறினார்.


Next Story