தோனி தலைமையில் விளையாடுவது ஒவ்வொரு வீரரின் கனவாக இருக்கும் - அவனிஷ் பேட்டி


தோனி தலைமையில் விளையாடுவது ஒவ்வொரு வீரரின் கனவாக இருக்கும் - அவனிஷ் பேட்டி
x

image courtesy; twitter/@ChennaiIPL

கடந்த வருடம் நடைபெற்ற ஐ.பி.எல். ஏலத்தில் சி.எஸ்.கே. அணி இவரை ஏலத்தில் எடுத்தது.

புதுடெல்லி,

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி இறுதிப்போட்டியில் தோல்வியை தழுவியது. இந்த தொடரில் லீக் மற்றும் அரையிறுதி ஆட்டங்களில் தோல்வியே சந்திக்காத இந்தியா இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோல்வியடைந்து கோப்பையை தவறவிட்டது.

முன்னதாக இந்த தொடரில் இந்திய அணிக்காக முஷீர் கான் உள்ளிட்ட நிறைய இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடி தங்களுடைய திறமையை நிரூபித்தனர். அந்த வரிசையில் இத்தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனாக 18 வயதாகும் ஆரவல்லி அவனிஷ் ராவ் மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடி வெற்றிகளில் பங்காற்றினார்.

உள்ளூர் கிரிக்கெட்டில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்துவதால் ஐ.பி.எல். தொடரில் 5 கோப்பைகளை வென்ற எம்.எஸ். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கடந்த ஏலத்தில் அவர் ரூ. 20 லட்சம் என்ற அடிப்படை தொகைக்கு வாங்கப்பட்டார்.

இந்நிலையில் விரைவில் சென்னை அணிக்காக விளையாடி எம்.எஸ். தோனி மற்றும் சி.எஸ்.கே. ரசிகர்களை பெருமையடைய வைப்பேன் என்று ஆரவல்லி அவனிஷ் கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு;-

"சென்னை அணிக்காக நான் தேர்வு செய்யப்பட்டேன் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அதை நான் புரிந்து கொள்வதற்கு நீண்ட நேரமானது. நான் தோனி சார் மற்றும் சி.எஸ்.கே. குடும்பத்தை பெருமையடைய வைக்க விரும்புகிறேன். தோனி தலைமையில் விளையாடுவது ஒவ்வொரு வீரரின் கனவாக இருக்கும்.

சிறு வயதில் இருந்தே நான் கிரிக்கெட்டராக வர விரும்பினேன். என்னுடைய அப்பா கிரிக்கெட்டை விரும்பி பார்ப்பார். அப்போது அவருடன் நான் உட்கார்ந்து பார்ப்பேன். அப்படித்தான் எனக்குள் அந்த ஆர்வம் வந்தது. மேலும் தோனி அவர்களிடமிருந்து, கடினமான சூழ்நிலையில் எப்படி அசத்துவது என்பதை பற்றி கற்றுக் கொள்ள விரும்புகிறேன். குறிப்பாக 2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அவர் விளையாடிய இன்னிங்ஸ்போல அவரிடம் நாம் கற்றுக்கொள்வதற்கு நிறைய அம்சங்கள் இருக்கின்றன" என்று கூறினார்.


Next Story