ரஞ்சி கிரிக்கெட்: தமிழகம்-மராட்டியம் ஆட்டம் 'டிரா'
ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழகம்-மராட்டியம் அணிகள் இடையிலான ஆட்டம் ‘டிரா’வில் முடிந்தது.
புனே,
88-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 38 அணிகள் 5 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.
தமிழ்நாடு- மராட்டியம் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் (பி பிரிவு) புனேயில் கடந்த 10-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே மராட்டியம் 446 ரன்களும், தமிழகம் 404 ரன்களும் குவித்தன. 42 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய மராட்டியம் 3-வது நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 104 ரன்கள் எடுத்திருந்தது.
இந்த நிலையில் 4-வது மற்றும் கடைசி நாளான நேற்று தொடர்ந்து பேட்டிங் செய்த மராட்டிய அணி 5 விக்கெட்டுக்கு 364 ரன்கள் எடுத்திருந்த போது போட்டி 'டிரா'வில் முடித்துக் கொள்ளப்பட்டது. கேப்டன் அங்கித் பாவ்னே 152 ரன்களுடனும் (259 பந்து, 13 பவுண்டரி, 3 சிக்சர்), அஜிம் காஸி 103 ரன்களுடனும் (140 பந்து, 10 பவுண்டரி, 3 சிக்சர்) களத்தில் இருந்தனர். என்றாலும் முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றதன் அடிப்படையில் மராட்டியம் 3 புள்ளியும், தமிழகம் ஒரு புள்ளியும் பெற்றன.
இந்த சீசனில் இன்னும் வெற்றிக்கணக்கை தொடங்காத தமிழக அணி ஒரு தோல்வி, 4 டிரா என்று 8 புள்ளிகளுடன் தனது பிரிவில் 6-வது இடத்தில் இருக்கிறது.
இதே பிரிவில் கவுகாத்தியில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான மும்பை அணி இன்னிங்ஸ் மற்றும் 128 ரன்கள் வித்தியாசத்தில் அசாமை பந்தாடியது. முதல் இன்னிங்சில் பாலோ-ஆன் ஆகி 317 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய அசாம் அணி கடைசி நாளான நேற்று 45 ஓவர்களில் 189 ரன்னில் சுருண்டது. நடப்பு தொடரில் மும்பை பெற்ற 3-வது வெற்றி இதுவாகும். 379 ரன்கள் குவித்து சாதனை படைத்த மும்பை தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷா ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
'சி' பிரிவில் போர்வோரிம் நகரில் நடந்த ஆட்டத்தில் கோவா அணி நிர்ணயித்த 44 ரன் இலக்கை புதுச்சேரி 19.1 ஓவர்களில் எட்டிப்பிடித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த சீசனில் புதுச்சேரியின் முதல் வெற்றி இதுவாகும். 2-வது இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை அள்ளிய புதுச்சேரி இடக்கை சுழற்பந்து வீச்சாளர் அங்கித் ஷர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
மத்தியபிரதேசம்-குஜராத் இடையிலான ஆட்டம் (டி பிரிவு) இந்தூரில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் மத்தியபிரதேசம் 312 ரன்களும், குஜராத் 211 ரன்களும் எடுத்தன. 101 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய மத்தியபிரதேச அணி 6 விக்கெட்டுக்கு 280 ரன்களுடன் 'டிக்ளேர்' செய்து 382 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. கடின இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை விளையாடிய குஜராத் அணி 40.3 ஓவர்களில் 121 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் மத்தியபிரதேசம் 260 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 6 புள்ளிகளை தட்டிச் சென்றது. 'டி' பிரிவில் இதுவரை ஆடிய 5 ஆட்டங்களிலும் வெற்றி கண்டு 32 புள்ளிகளுடன் கம்பீரமாக முதலிடத்தில் பயணிக்கும் நடப்பு சாம்பியனான மத்தியபிரதேசம் முதல் அணியாக கால்இறுதிக்குள் கால்பதித்தது.