ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டம்: முதல் நாளில் மும்பை அணி 248 ரன்கள் சேர்ப்பு


ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டம்: முதல் நாளில் மும்பை அணி 248 ரன்கள் சேர்ப்பு
x

நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் மும்பை அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்துள்ளது.

பெங்களூரு,

87-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் மும்பை-மத்தியபிரதேச அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த இறுதி யுத்தம் பெங்களூருவில் நேற்று தொடங்கியது. 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் பிரித்வி ஷா, யாஷஸ்வி ஜெய்ஸ்வால் களம் இறங்கினார்கள். இருவரும் நிதானமாகவும், நேர்த்தியாகவும் ஆடி சிறப்பான தொடக்கம் தந்தனர்.

அணியின் ஸ்கோர் 87 ரன்னாக உயர்ந்த போது பிரித்வி ஷா 47 ரன்னில் (79 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) அனுபவ் அகர்வால் பந்து வீச்சில் போல்டு ஆனார். அடுத்து வந்த அர்மான் ஜாபர் 26 ரன்னிலும், சுவேத் பார்கர் 18 ரன்னிலும் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தனர். நிலைத்து நின்று ஆடிய ஜெய்ஸ்வால் 78 ரன்னில் (163 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) அனுபவ் அகர்வால் பந்து வீச்சில் வீழ்ந்தார். விக்கெட் கீப்பர் ஹர்திக் தாமோர் (24 ரன்) நிலைக்கவில்லை.

நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் மும்பை அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்துள்ளது. சர்ப்ராஸ் கான் 40 ரன்னுடனும், ஷம்ஸ் முலானி 12 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இதனை தொடர்ந்து இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.


Next Story