கடந்த இரு சீசனில் பேட்டிங்கில் தடுமாறியதாக கூறிய பவுச்சர்: ரோகித் சர்மாவின் மனைவி பதிலடி


கடந்த இரு சீசனில் பேட்டிங்கில் தடுமாறியதாக கூறிய பவுச்சர்: ரோகித் சர்மாவின் மனைவி பதிலடி
x

ஹர்திக் பாண்ட்யாவுக்கு மிகச்சிறந்த கேப்டன்ஷிப் திறமை இருக்கிறது என்று மும்பை அணியின் பயிற்சியாளர் பவுச்சர் தெரிவித்திருந்தார்.

கேப்டவுன்,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணி ரோகித் சர்மா தலைமையில் 5 முறை கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. அந்த அணியின் வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்த ரோகித் சர்மாவிடம் இருந்து கேப்டன் பதவி கடந்த டிசம்பர் மாதம் அதிரடியாக பறிக்கப்பட்டது. குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து வீரர்கள் பரிமாற்றம் அடிப்படையில் வாங்கப்பட்ட ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா 17-வது ஐ.பி.எல். தொடருக்கான மும்பை அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதனால் அதிர்ச்சிக்குள்ளான ரோகித் சர்மாவின் ரசிகர்கள் மும்பை அணியின் சமூக வலைதளத்தை பின்தொடர்வதை நிறுத்தி தங்களது எதிர்ப்பை காண்பித்தனர்.

இந்த நிலையில் கேப்டன் பதவியில் 36 வயதான ரோகித் சர்மா நீக்கப்பட்டது ஏன் என்பது குறித்து மும்பை அணி நிர்வாகம் தரப்பில் முதல் முறையாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதன் தலைமை பயிற்சியாளர் மார்க் பவுச்சர் (தென்ஆப்பிரிக்கா) இது குறித்து கூறியதாவது:-

ஹர்திக் பாண்ட்யாவை முதலில் ஒரு வீரராகவே வாங்கினோம். ஆனால் புதிய வீரர்களுடன் அணியை வலுவாக கட்டமைத்து அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதற்கான நிலையில் இருப்பதால், பாண்ட்யாவை கேப்டனாக நியமித்தோம். இது முழுக்க முழுக்க கிரிக்கெட் சார்ந்த ஒரு முடிவு. இந்தியாவில் உள்ள நிறைய ரசிகர்களால் இதனை புரிந்து கொள்ள முடியவில்லை. அவர்கள் மிகவும் உணர்ச்சி வசப்படுகிறார்கள். உணர்ச்சியை ஒதுக்கி வைத்து விட்டு பார்த்தால், எதற்காக இந்த முடிவை எடுத்தோம் என்பது புரியும். இதன் மூலம் ரோகித் சர்மாவை ஒரு சிறந்த மனிதராக, இன்னும் சிறந்த பேட்ஸ்மேனாக நிச்சயம் வெளிக்கொண்டு வர முடியும் என்று நினைக்கிறேன். கேப்டன்ஷிப் அழுத்தம் இன்றி அவர் உற்சாகமாக விளையாடி ரன்கள் குவிக்கட்டும்.

ஒரு வீரராக ரோகித் சர்மாவின் பங்களிப்பு மும்பை அணிக்கு தேவைப்படுகிறது. பேட்ஸ்மேனாக அணிக்கு மிகப்பெரிய பலத்தை கொடுப்பார் என்பதை அறிவோம். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக மும்பை அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்ட அவர், ஒரு பேட்ஸ்மேனாக பெரிய அளவில் ஜொலிக்கவில்லை. இதனால் மும்பை அணியில் உள்ள அனைத்து நிர்வாகிகளுடன் ஆலோசித்த பிறகு அவரை ஒரு வீரராக இறக்கினால், அது அவருடைய பேட்டிங் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பாக அமையும் என்று கருதினோம்.

இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் அவர் மீது நிறைய எதிர்பார்ப்பு இருக்கிறது. அவர் எங்கு சென்றாலும் கேமராக்கள் மொய்க்கின்றன. அந்த அளவுக்கு ரொம்ப பிசியாக இருக்கிறார். எனவே ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அவர் நெருக்கடி இல்லாமல் புன்னகை ததும்ப விளையாடுவதை பார்க்க விரும்புகிறோம்.

ஹர்திக் பாண்ட்யாவை பொறுத்தவரை குஜராத் அணியின் கேப்டனாக பணியாற்றிய முதல் ஆண்டிலேயே அந்த அணிக்கு கோப்பையை வென்றுத் தந்தார். மறு ஆண்டில் அந்த அணி 2-வது இடம் பிடித்தது. அவரிடம் மிகச்சிறந்த கேப்டன்ஷிப் திறமை இருக்கிறது என்று பவுச்சர் தெரிவித்திருந்தார்.

ரோகித் சர்மா கடந்த இரு சீசனில் பேட்டிங்கில் தடுமாறியதாக பவுச்சர் கூறியதை கேட்டு கோபமடைந்த ரோகித் சர்மாவின் மனைவி ரித்திகா, அவர் சொன்னதில் பல விஷயங்கள் தவறாக இருக்கிறது என்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். பிறகு சர்ச்சைக்குரிய அந்த பதிவு நீக்கப்பட்டது. என்றாலும் மும்பை அணி நிர்வாகம் மீது ரோகித் சர்மா குடும்பம் கடும் அதிருப்தியில் இருப்பது வெளிப்படையாக தெரிகிறது.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ரோகித் சர்மா 2022-ம் ஆண்டில் 14 ஆட்டத்தில் 268 ரன்களும், 2023-ம் ஆண்டில் 16 ஆட்டங்களில் 332 ரன்களும் எடுத்தது குறிப்பிடத்தக்கது.


Next Story