ஐபிஎல் தொடரில் இருந்து இன்னும் ஓய்வு பெறவில்லை - எம்.எஸ். தோனி


ஐபிஎல் தொடரில் இருந்து இன்னும் ஓய்வு பெறவில்லை - எம்.எஸ். தோனி
x

Image Courtesy: @ChennaiIPL

2024-ம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் மாதம் 18 அல்லது 19ம் தேதியில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

பெங்களூரு,

இந்தியாவில் நடத்தப்படும் 20 ஓவர் கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரிமீயர் லீக் (ஐபிஎல்) தொடருக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் 2024ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் மாதம் 18 அல்லது 19ம் தேதியில் நடக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

இதையடுத்து ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணிகளிலும் தக்க வைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை சமர்ப்பிக்க நவம்பர் 15-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் ஏராளமான ரசிகர்கள் மனதில் எழும் ஒரே கேள்வி என்னவென்றால் அடுத்த ஐபிஎல் தொடரில் எம்.எஸ்.தோனி விளையாடுவாரா என்பதுதான்.

இந்நிலையில் இந்த கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக பெங்களூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தோனியிடம் இருந்து ஒரு பதில் கிடைத்துள்ளது. அதாவது, பெங்களூரில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் சிஎஸ்கே கேப்டன் தோனி கலந்துகொண்டார்

அந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளர் பேசும் போது, கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வுபெற்றுவிட்டார் என்று கூறினார். அப்போது தோனிக்கு அருகில் இருந்த நபர், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து மட்டும் தான் தோனி ஓய்வு பெற்றுள்ளார் என்று கூறி தவறை திருத்தினார். அதற்கு தோனி, ஆம் என்று கூற, சிஎஸ்கே ரசிகர்கள் கரகோஷம் எழுப்பினர்.

அதன்பின் தோனியின் காலில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, அறுவை சிகிச்சைக்கு பின் காயத்தில் இருந்து விடுபட்டுவிட்டேன். ஆனால் இன்னும் குணமடையவில்லை. மருத்துவர்கள் நவம்பர் மாதத்தில் முழுமையாக குணமடைவேன் என்று கூறியிருக்கிறார்கள் என தோனி கூறினார்.

இதன் மூலம் தோனி கட்டாயம் அடுத்த ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே கேப்டனாக விளையாடுவார் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.


Next Story