சூர்யகுமார் யாதவ் அதிரடி: வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி இந்தியா வெற்றி..!
இந்திய அணி 17.5 ஓவர்களில் இலக்கை கடந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
கயானா,
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கயானாவில் நேற்று நடந்தது. இந்திய அணியில் இரு மாற்றமாக இஷான் கிஷன், ரவி பிஷ்னோய் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக புதுமுக வீரர் ஜெய்வால், குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டனர்.
'டாஸ்' ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீசுக்கு பிரன்டன் கிங்கும், கைல் மேயர்சும் அருமையான தொடக்கம் தந்தனர். இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 55 ரன்கள் (7.4 ஓவர்) எடுத்து பிரிந்தனர். மேயர்ஸ் 25 ரன்னிலும், அடுத்து வந்த ஜான்சன் சார்லஸ் 12 ரன்னிலும் வெளியேறினர். முந்தைய ஆட்டத்தில் ரன்மழை பொழிந்த விக்கெட் கீப்பர் நிகோலஸ் பூரன் (20 ரன்) இந்த தடவை நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. அவர் குல்தீப் யாதவின் சுழலில் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய பிரன்டன் கிங் 42 ரன்களில் (42 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனார். ஹெட்மயர் 9 ரன்னில் வீழ்ந்தார்.
குல்தீப் யாதவ் சாதனை
மிடில் வரிசையில் கேப்டன் ரோமன் பவெல் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோர் 150-ஐ கடக்க உதவினார். 20 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது. பவெல் 40 ரன்னுடனும் (19 பந்து, ஒரு பவுண்டரி, 3 சிக்சர்), ஷெப்பர்டு 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும், அக்ஷர் பட்டேல், முகேஷ்குமார் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதையும் சேர்த்து குல்தீப் யாதவின் விக்கெட் எண்ணிக்கை 50-ஆக (30 ஆட்டம்) உயர்ந்தது. இதன் மூலம் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிவேகமாக 50 விக்கெட் வீழ்த்திய இந்தியர் என்ற சாதனையை (முன்பு யுஸ்வேந்திர சாஹல் 34 ஆட்டத்தில்) படைத்தார்.
சூர்யகுமார் 100-வது சிக்சர்
அடுத்து 160 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்தியாவுக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஏமாற்றம் அளித்தனர். தனது முதலாவது சர்வதேச 20 ஓவர் போட்டியில் கால்பதித்த ஜெய்ஸ்வால் (1 ரன்) முதல் ஓவரிலேயே பந்தை தூக்கியடித்து கேட்ச் ஆனார். சுப்மன் கில் 6 ரன்னில் வெளியேறினார்.
இதற்கிடையே 2-வது விக்கெட்டுக்கு நுழைந்த சூர்யகுமார் யாதவ், பவுண்டரி, சிக்சருடன் ரன்வேட்டையை சரவெடியாக தொடங்கினார். தொடர்ந்து மட்டையை சுழற்றிய அவர் 23 பந்துகளில் தனது 14-வது அரைசதத்தை எட்டி விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை நொறுக்கித்தள்ளிய அவர் தனது பங்குக்கு 83 ரன்கள் (44 பந்து, 10 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசினார். இதில் 3-வது சிக்சர், சர்வதேச 20 ஓவர் போட்டியில் சூர்யகுமாரின் 100-வது சிக்சராக பதிவானது. இந்த மைல்கல்லை எட்டிய 3-வது இந்தியர் ஆவார்.
இதன் பின்னர் திலக் வர்மாவும், கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவும் இணைந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர். பாண்ட்யாவின் மெகா சிக்சருடன் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.
இந்தியா வெற்றி
இந்திய அணி 17.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 164 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. திலக் வர்மா 49 ரன்னுடனும் (37 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்), ஹர்திக் பாண்ட்யா 20 ரன்னுடனும் (15 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தனர்.
வெற்றி பெற்றாலும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் 1-2 என்ற கணக்கில் பின்தங்கியே உள்ளது. முதல் இரு ஆட்டங்களில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றிருந்தது.
எஞ்சிய இரு ஆட்டங்கள் அமெரிக்காவின் லாடெர்ஹில்லில் நடக்கிறது. இவ்விரு அணிகள் மோதும் 4-வது 20 ஓவர் போட்டி வருகிற 12-ந்ேததி நடக்கிறது.