டி20 உலகக் கோப்பை: வங்காளதேசத்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி


டி20 உலகக் கோப்பை: வங்காளதேசத்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி
x

image courtesy: ICC twitter

20 ஓவர்கள் முடிவில் வங்காள தேசம் அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 109 ரன்கள் எடுத்தது.

வாஷிங்டன்,

டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இதில், நியூயார்க்கில் இன்று நடைபெற்ற 21-வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - வங்காளதேசம் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக குயின்டன் டிகாக், ஹெண்ட்ரிக்ஸ் களமிறங்கினர். ஹெண்ட்ரிக்ஸ் தான் சந்தித்த முதல் பந்திலேயே ரன் எதுவும் எடுக்காமல் (0) எல்பிடபுள்யூ முறையில் அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார். மற்றொரு தொடக்க வீரர் குயின்டன் டிகாக் 11 பந்துகளில் 18 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

அடுத்துவந்த மார்க்ரம் 4 ரன்களிலும், ஸ்டப்ஸ் ரன் எதுவும் எடுக்காமலும் (0) அடுத்தடுத்து அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். பின்னர், 5-வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த ஹெண்ட்ரிச் கிளாசன், டேவிட் மில்லர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 17.3 ஓவரில் தென் ஆப்பிரிக்கா 102 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கிளாசன் அவுட் ஆனார். அவர் 44 பந்துகளில் 46 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தஷ்கின் அகமது பந்து வீச்சில் அவுட் ஆனார். 38 பந்துகளை சந்தித்த டேவிட் மில்லர் 29 ரன்கள் எடுத்த நிலையில் ரஷீத் ஹசன் பந்து வீச்சில் அவுட் ஆனார்.

இறுதியில் தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் வங்காளதேசம் அணி களமிறங்கியது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய தன்சித் ஹசன் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த லிட்டன் தாஸ் 9 ரன்களிலும், சாகிப் அல் ஹசன் 3 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். அடுத்து வந்த தவுகித் ஹிரிடோய் சிறப்பாக விளையாடி 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இந்த நிலையில் 20 ஓவர்கள் முடிவில் வங்காள தேசம் அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 109 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 4 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி திரில் வெற்றி பெற்றது.


Next Story
  • chat