பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்; முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 487 ரன்களுக்கு ஆல் அவுட்..!


பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்; முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 487 ரன்களுக்கு ஆல் அவுட்..!
x

Image Courtesy: @ICC

ஆஸ்திரேலியா தரப்பில் டேவிட் வார்னர் 164 ரன்கள் அடித்தார்.

பெர்த்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதனையடுத்து ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய வார்னர் மற்றும் கவாஜா சிறப்பாக விளையாடி அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தனர்.

முதல் விக்கெட்டுக்கு 126 ரன்கள் அடித்த நிலையில் கவாஜா 41 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய மார்னஸ் லாபுசாக்னே 16 ரன்களில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். அதன்பின் வார்னருடன் ஜோடி சேர்ந்த சுமித் சிறிது நேரம் நிலைத்து விளையாடி 31 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய டேவிட் வார்னர் சதமடித்து அசத்தினார்.

சதமடித்த பின்பும் சிறப்பாக விளையாடிய வார்னருக்கு ஹெட் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். ஹெட் தனது பங்குக்கு 40 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய வார்னர் 164 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார்.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 84 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 346 ரன்கள் குவித்திருந்தது. இதையடுத்து 2வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. தொடர்ந்து பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இதில் மிட்செல் மார்ஷ் அரைசதம் அடித்தார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மார்ஷ் 90 ரன்களில் அவுட் ஆனார். மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய அலெக்ஸ் கேரி 34 ரன்களிலும், அடுத்து களம் இறங்கிய ஸ்டார்க் 12 ரன்களிலும், கம்மின்ஸ் 9ரன்களிலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர்.

இறுதியில் ஆஸ்திரேலிய அணி 113.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 487 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் அமீர் ஜமால் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சை ஆடி வருகிறது.


Next Story