பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்; இலங்கை அணி 312 ரன்களில் ஆல்அவுட்...!!
இலங்கை அணியின் துணை கேப்டன் தனஞ்ஜெயா டி சில்வா சதமடித்து அசத்தினார்.
காலே,
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலாவது டெஸ்ட் காலேயில் நேற்று தொடங்கியது.
'டாஸ்' ஜெயித்த இலங்கை கேப்டன் திமுத் கருணாரத்னே முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். இதன்படி அவரும், நிஷான் மதுஷ்காவும் இலங்கையின் இன்னிங்சை தொடங்கினர். மதுஷ்கா 4 ரன்னில், இடக்கை வேகப்பந்து வீச்சாளர் ஷகீன் ஷா அப்ரிடியின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் சர்ப்ராசிடம் சிக்கினார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அப்ரிடியின் 100-வது விக்கெட் இதுவாகும். இந்த மைல்கல்லை எட்டிய 19-வது பாகிஸ்தான் பவுலர் ஆவார். காயத்தால் ஓராண்டுக்கு பிறகு டெஸ்ட் அணிக்கு திரும்பியுள்ள அப்ரிடி, அடுத்து வந்த குசல் மென்டிஸ் (12 ரன்), கேப்டன் கருணாரத்னே (29 ரன்) ஆகியோரையும் வெளியேற்றி கவனத்தை ஈர்த்தார். தினேஷ் சன்டிமாலும் (1 ரன்) நிலைக்கவில்லை.
54 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து தள்ளாடிய இலங்கை அணியை முன்னாள் கேப்டன் மேத்யூசும், துணை கேப்டன் தனஞ்ஜெயா டி சில்வாவும் இணைந்து சரிவில் இருந்து காப்பாற்றினர். ஸ்கோர் 185 ஆக உயர்ந்த போது மேத்யூஸ் 64 ரன்னில் (109 பந்து, 9 பவுண்டரி) கேட்ச் ஆனார். அடுத்து வந்த சமரவிக்ரமா 36 ரன்னில் ஆட்டமிழந்ததும் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
இலங்கை அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 65.4 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 242 ரன்கள் எடுத்தது. 10-வது சதத்தை நெருங்கிய தனஞ்ஜெயா டி சில்வா 94 ரன்களுடன் (157 பந்து, 10 பவுண்டரி, 3 சிக்சர்) களத்தில் இருந்தார். முதல் நாளில் ஆட்டம் இரண்டு முறை மழையால் நிறுத்தப்பட்டு, 2 மணி நேரத்திற்கு மேலாக பாதிப்புக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.
2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த இலங்கை அணி உணவு இடைவேளைக்கு முன்பாக 312 ரன்களில் ஆல்அவுட் ஆனது. தனஞ்ஜெயா டி சில்வா 122 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். பாகிஸ்தான் அணி தரப்பில் சாஹின் அப்ரிடி,நசீம் ஷா மற்றும் அப்ரார் அகமது தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
உணவு இடைவேளைக்கு பின் பாகிஸ்தான் அணி தனது இன்னிங்சை தொடங்க உள்ளது.