வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட்; 3-வது நாளில் தென்ஆப்பிரிக்கா வெற்றி


வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட்; 3-வது நாளில் தென்ஆப்பிரிக்கா வெற்றி
x

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் தென்ஆப்பிரிக்க அணி 3-வது நாளிலேயே அபார வெற்றி பெற்றது.

செஞ்சூரியன்,

தென்ஆப்பிரிக்கா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த 28-ந்தேதி செஞ்சூரியனில் தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே தென்ஆப்பிரிக்கா 342 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ் 212 ரன்களும் எடுத்தன. 130 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா 2-வது நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 49 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில் 3-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய தென்ஆப்பிரிக்கா 28 ஓவர்களில் 116 ரன்னில் சுருண்டது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக தென்ஆப்பிரிக்காவின் குறைந்த ஸ்கோர் இதுவாகும். அதிகபட்சமாக மார்க்ரம் 47 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் கெமார் ரோச் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இதன் மூலம் வெஸ்ட் இண்டீசுக்கு 247 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள், எதிரணியின் புயல்வேக பந்து வீச்சில் மிரண்டனர். கேப்டன் கிரேக் பிராத்வெய்ட் டக்-அவுட் ஆனார். தேஜ்நரின் சந்தர்பால் 10 ரன்னில் வெளியேறினார். இந்த வீழ்ச்சியில் இருந்து வெஸ்ட் இண்டீசால் நிமிர முடியவில்லை. ஜெர்மைன் பிளாக்வுட் (79 ரன், 93 பந்து, 12 பவுண்டரி, ஒரு சிக்சர்) தவிர மற்றவர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.

முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2-வது இன்னிங்சில் 41 ஓவர்களில் 159 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் தென்ஆப்பிரிக்கா 87 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீசை நிலைகுலைய செய்த வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபடா 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரில் தென்ஆப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2-வது டெஸ்ட் வருகிற 8-ந்தேதி ஜோகன்னஸ்பர்க்கில் தொடங்குகிறது.


Next Story