இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: பரபரப்பான போட்டியில் கடைசி பந்தில் வெற்றிபெற்றது நியூசிலாந்து அணி


இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: பரபரப்பான போட்டியில் கடைசி பந்தில் வெற்றிபெற்றது நியூசிலாந்து அணி
x

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கடைசி பந்தில் நியூசிலாந்து அணி ‘திரில்’ வெற்றி பெற்று வரலாறு படைத்தது. வில்லியம்சன் சதம் அடித்தார்.

கிறைஸ்ட்சர்ச்,

முதலாவது டெஸ்ட்

நியூசிலாந்து-இலங்கை அணிகள் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் கடந்த 9-ந் தேதி தொடங்கியது.

இதில் முதல் இன்னிங்சில் முறையே இலங்கை 355 ரன்னும், நியூசிலாந்து 373 ரன்னும் எடுத்தன. 18 ரன் பின்தங்கிய இலங்கை அணி 2-வது இன்னிங்சில் 302 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்து அணிக்கு 285 ரன்களை வெற்றி இலக்காக இலங்கை நிர்ணயித்தது.

கடின இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 4-வது நாள் முடிவில் 17 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 28 ரன்கள் எடுத்திருந்தது. டாம் லாதம் 11 ரன்களுடனும், கேன் வில்லியம்சன் 7 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

மழையால் பாதிப்பு

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் மழை காரணமாக சுமார் 4 மணி நேரம் தாமதமாக நேற்று தொடங்கியது. இதனால் மேற்கொண்டு 257 ரன்களை 53 ஓவர்களில் எடுக்க வேண்டிய நெருக்கடிக்கு நியூசிலாந்து தள்ளப்பட்டது. எனவே அந்த அணி டிரா செய்யும் முனைப்புடன் ஆடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதற்கு ஏற்ப, தொடர்ந்து ஆடிய டாம் லாதம் 24 ரன்னிலும், அடுத்து வந்த ஹென்றி நிகோல்ஸ் 20 ரன்னிலும் பிரபாத் ஜெயசூர்யாவின் சுழலில் சிக்கினர். இதைத்தொடர்ந்து டேரில் மிட்செல், கேன் வில்லியம்சுடன் கைகோர்த்தார். இந்த ஜோடியினர் ஆட்டத்தின் போக்கை தலைகீழாக மாற்றினர். முதலில் நிதானத்தை கடைபிடித்த வில்லியம்சன் தன்னை நிலைநிறுத்திய பிறகு அடித்து ஆடினார். முதல் இன்னிங்சில் சதம் அடித்து மிரட்டிய டேரில் மிட்செல் களம் புகுந்தது முதல் அதிரடியாக மட்டையை சுழற்றினார். அவர் பிரபாத் ஜெயசூர்யா பந்து வீச்சில் 4 சிக்சர்கள் விளாசி அமர்க்களப்படுத்தினார்.

டேரில் மிட்செல் 81 ரன்கள்

அணியின் ஸ்கோர் 232 ரன்னாக உயர்ந்த போது டேரில் மிட்செல் 81 ரன்னில் (86 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்) அசிதா பெர்னாண்டோ பந்து வீச்சில் போல்டு ஆனார்.

அதைத் தொடர்ந்து விக்கெட் கீப்பர் டாம் பிளன்டெல் 3 ரன்னிலும், பிரேஸ்வெல் 10 ரன்னிலும், கேப்டன் டிம் சவுதி 1 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இருப்பினும் மறுமுனையில் நிலைத்து நின்று ஆடி அணியை வெற்றியை நோக்கி பயணிக்க வைத்த வில்லியம்சன் தனது 27-வது சதத்தை பூர்த்தி செய்தார். முன்னதாக வில்லியம்சன் 33 ரன்னில் இருந்த போது கொடுத்த கேட்ச் வாய்ப்பை விக்கெட் கீப்பர் டிக்வெல்லா தவறவிட்டது குறிப்பிடத்தக்கது.

கடைசி ஓவரில் நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு 7 ரன்கள் தேவையாக இருந்ததால் போட்டியில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. வேகப்பந்து வீச்சாளர் அசிதா பெர்னாண்டோ வீசிய அந்த ஓவரின் முதல் பந்தில் வில்லியம்சன் ஒரு ரன் எடுத்தார். அடுத்த பந்தில் ஒரு ரன் சேர்த்த மேட் ஹென்றி (4 ரன்) 3-வது பந்தில் ரன்-அவுட் ஆனார். 4-வது பந்தில் வில்லியம்சன் பவுண்டரி விரட்டியதால் கடைசி 2 பந்தில் ஒரு ரன் தேவையாக இருந்தது. 5-வது பந்தில் ரன் வரவில்லை. இதனால் கடைசி பந்தில் ஒரு ரன் தேவைப்பட்டதால் ரசிகர்கள் இருக்கையின் நுனிக்கே வந்து விட்டனர். பவுன்சராக வீசப்பட்ட கடைசி பந்தை அடிக்க முயன்று தோல்வி அடைந்த வில்லியம்சன் ரன்னுக்காக ஓட்டம் பிடித்தார். பந்தை பிடித்த விக்கெட் கீப்பர் டிக்வெல்லா பவுலர் முனையில் உள்ள ஸ்டம்பை குறிதவறாமல் வீழ்த்தினார். ஆனால் அதற்குள் வில்லியசம்சன் பேட்டை கிரீசுக்குள் வைத்தது ரீப்ளேயில் தெரியவந்ததால் அவுட்டில் இருந்து தப்பினார். வில்லியம்சன் ஆட்டம் இழந்து இருந்தால் போட்டி சமனில் (டை) முடிந்து இருக்கும்.

நியூசிலாந்து 'திரில்' வெற்றி

முடிவில் நியூசிலாந்து அணி 70 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் சேர்த்து 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை சுவைத்தது. வில்லியம்சன் 121 ரன்னுடனும் (194 பந்து, 11 பவுண்டரி, ஒரு சிக்சர்) , காயத்துடன் களம் இறங்கிய நீல் வாக்னெர் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் (102 மற்றும் 81 ரன்கள்) ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்த மைதானத்தில் ஒரு அணி விரட்டிப்படித்த அதிகபட்ச ரன் இலக்கு இதுவாகும். அத்துடன் 146 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் கடைசி பந்தில் ஒரு அணி வெற்றி கண்ட 2-வது நிகழ்வாக பதிவானது. ஏற்கனவே 1948-ம் ஆண்டு டர்பனில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 128 ரன் இலக்கை இதேபோல் கடைசி பந்தில் எட்டி இருந்தது.

அடுத்த ஆட்டம்

இந்த தோல்வியின் மூலம் இலங்கை அணியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வாய்ப்பு பறிபோனது. கடைசி டெஸ்ட் போட்டி வெலிங்டனில் வருகிற 17-ந் தேதி தொடங்குகிறது.


Next Story