'எங்களை விட இலங்கை அணி சிறப்பாக விளையாடியது' - பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம்


எங்களை விட இலங்கை அணி சிறப்பாக விளையாடியது - பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம்
x

Image Courtesy : @ACCMedia1 twitter

மெண்டிஸ், சமரவிக்ரமா பார்ட்னர்ஷிப்பை பிரிக்க முடியாததால் தங்கள் வெற்றி பறிபோனதாக பாபர் அசாம் தெரிவித்தார்.

கொழும்பு,

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2-வது அணி எது? என்பதை நிர்ணயிக்கும் சூப்பர்4 சுற்றின் முக்கியமான ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இலங்கையும், பாகிஸ்தானும் நேற்று மோதின.

மழை காரணமாக ஆட்டம் 2¼ மணி நேரம் பாதிக்கப்பட்டதால் 45 ஓவராக குறைக்கப்பட்டது. இதையடுத்து 'டாஸ்' ஜெயித்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதன்படி அப்துல்லா ஷபிக்கும், பஹர் ஜமானும் பாகிஸ்தானின் இன்னிங்சை தொடங்கினர்.

இதில் பஹர் ஜமான் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் பாபர் அசாம் 29 ரன்னிலும், அப்துல்லா ஷபிக் 52 ரன்னிலும், முகமது ஹாரிஸ் 3 ரன்னிலும், முகமது நவாஸ் 12 ரன்னிலும் வெளியேறினர். பாகிஸ்தான் 5 விக்கெட்டுக்கு 130 ரன்களுடன் தள்ளாடிய சூழலில், விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வானும், இப்திகர் அகமதுவும் கைகோர்த்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

இடையில் மழையால் மேலும் அரைமணி நேரம் ஆட்டம் தடைபட்டதால் 42 ஓவராக குறைக்கப்பட்டது. இறுதியாக நிர்ணயிக்கப்பட்ட 42 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுக்கு 252 ரன்கள் சேர்த்தது. பின்னர், 'டக்வொர்த் லீவிஸ்' விதிப்படி இலங்கை அணி 42 ஓவர்களில் 252 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கு சற்று மாற்றி அமைக்கப்பட்டது.

இதை நோக்கி ஆடிய இலங்கை அணியில் குசல் பெரேரா 17 ரன்னிலும், நிசாங்கா 29 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 3-வது விக்கெட்டுக்கு குசல் மென்டிசும், சமரவிக்ரமாவும் இணைந்து அணியை நிமிர வைத்தனர். இவர்களை அவ்வளவு எளிதில் பாகிஸ்தான் பவுலர்களால் பிரிக்க முடியவில்லை.

இறுதியாக இலங்கை அணி 42 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 252 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 11-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கும் இறுதி ஆட்டத்தில் இந்தியா-இலங்கை அணிகள் சந்திக்கின்றன.

இந்நிலையில், தோல்வி குறித்து பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் கூறியதாவது;-

"கடைசி கட்டத்தில் சிறந்த பவுலர்கள் பந்து வீசவேண்டும் என முடிவு செய்தேன். அதனாலேயே ஆட்டத்தின் கடைசி ஓவருக்கு முதல் ஓவரை ஷகினிடம் கொடுத்தேன். அதன்பின், இறுதி ஓவரை சமான் கானிடம் கொடுத்தேன். அவர்மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக தோல்வியை தழுவினோம்.

எங்களை விட இலங்கை அணியினர் சிறப்பாக விளையாடினார்கள். அதனால் அவர்கள் வெற்றி பெற்றார்கள். எங்களுடைய பந்துவீச்சும் சரி, பீல்டிங்கும் சரி, சரியான தரத்தில் இல்லை என்பதால் நாங்கள் தோற்றோம். போட்டியின் மிடில் ஓவர்களில் எங்களுடைய பந்துவீச்சு எடுபடவில்லை.

மெண்டிஸ், சமரவிக்ரமா பார்ட்னர்ஷிப்பை பிரிக்க முடியாததால் நாங்கள் வெற்றி பெற முடியாமல் போனது. எங்கள் ஆட்டத்தின் தொடக்கமும், முடிவும் சரியாக இருந்தது, ஆனால் இடைப்பட்ட ஓவர்களில் நாங்கள் சரியாக செயல்படவில்லை."

இவ்வாறு பாபர் அசாம் தெரிவித்தார்.


Next Story