'ஹர்திக் பாண்டியா போல் செயல்படத் தொடங்கும் நேரம் இது' - பாகிஸ்தான் முன்னாள் விக்கெட் கீப்பர் கம்ரன் அக்மல்


ஹர்திக் பாண்டியா போல் செயல்படத் தொடங்கும் நேரம் இது - பாகிஸ்தான் முன்னாள் விக்கெட் கீப்பர் கம்ரன் அக்மல்
x

image courtesy;AFP

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இடம் பெற்றுள்ள ஆல்ரவுண்டருக்கு கம்ரன் அக்மல் அறிவுரை வழங்கியுள்ளார்.

இஸ்லாமாபாத்,

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பாகிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 6 நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பைத் தொடர் வரும் 30ஆம் தேதி தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் நேபாளம் அணிகள் மோதுகின்றன. இந்தியா - பாகிஸ்தான் மோதும் லீக் ஆட்டம் செப்டம்பர் 2 அன்று இலங்கையின் கண்டியில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியில் பஹிம் அஸ்ரப் என்ற ஆல்ரவுண்டர் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அணிக்கு திரும்பியிருக்கிறார். உலக கோப்பை தொடருக்கு பாகிஸ்தான் அணியில் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் தேவை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியது.

அஸ்ரப் கடைசியாக 2021-ல் ஒருநாள் போட்டியில் விளையாடினார். தற்போது கனடாவில் நடந்து முடிந்த குளோபல் டி20 தொடரிலும் அவரது செயல்பாடு பெரிய அளவில் இல்லை. அவர் ஐந்து போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகள் மற்றும் 21 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இருப்பினும் இந்தியாவில் நடைபெறும் முக்கியமான ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கு பாகிஸ்தான் தயாராகி வரும் நிலையில் அஸ்ரப் சேர்க்கப்பட்டிருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் அவரை அணியில் சேர்த்தது குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் கம்ரான் அக்மல், ''அஸ்ரப் தன்னை அணியில் தேர்வு செய்தது சரியான முடிவு என்பதை நிரூபிக்கும் நேரம் இது. மேலும் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்கு தற்போதைய துணை கேப்டனாக இருக்கும் இந்திய வீரர் ஹர்திக் பாண்டியாவிடம் இருந்து கற்றுக் கொள்ளுங்கள். ஹர்திக் பாண்டியா இல்லாமல் இந்திய ஒருநாள் போட்டி அணி ஒருபோதும் முழுமையடையாது. ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணி அறிவிக்கப்படும் ஒவ்வொரு முறையும் அவர் அணியில் இருக்கிறார். அவரது சாதனையைப் பாருங்கள். அவர் தனது அணிக்காக பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் சிறப்பான பங்காற்றுகிறார். பஹிம் அஸ்ரப்பும் அவரைப் போல செயல்படத் தொடங்கும் நேரம் இது" என்று அக்மல் தனது அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் கூறியுள்ளார்.

மேலும் அவர், 'பாகிஸ்தான் ஒருநாள் போட்டி அணி அறிவிக்கப்படும் போதெல்லாம் பஹிம் அஸ்ரப் அணியில் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆல்ரவுண்டராக அவரை வளர்த்துக் கொள்ள வேண்டும். அவரை அணியில் சேர்த்ததற்கு கிடைத்த ஆதரவு வீணாகிவிடக்கூடாது என்றும், அவர் மீது காட்டிய நம்பிக்கைக்கு உரிய மதிப்பு வழங்க வேண்டும்' என்றும் கூறியுள்ளார்.


Next Story