விதிமுறையை மீறிய விராட் கோலி; எச்சரித்த பிசிசிஐ..!!


விதிமுறையை மீறிய விராட் கோலி; எச்சரித்த பிசிசிஐ..!!
x

இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான விராட் கோலி, பெங்களூருவில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற யோ-யோ டெஸ்டில் 17.2 மதிப்பெண்களை பெற்றார்.

மும்பை,

உலகக்கோப்பைக்கு ஆசிய கண்டத்தைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் தயாராகும் வகையில் வரும் 30ம் தேதி ஆசிய கோப்பை தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து விரைவில் இந்தியாவில் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. உலகக்கோப்பையில் களமிறங்கும் தங்களுடைய இறுதிக்கட்ட வீரர்களை தேர்வு செய்ய உதவும் இந்த தொடரில் விளையாடுவதற்கு ரோகித் சர்மா தலைமையிலான 17 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இலங்கையில் நடைபெறும் ஆசிய கோப்பை போட்டிகளில் விளையாடுவதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் விரைவில் அங்கு செல்ல உள்ளனர். அதற்கு முன்பாக பெங்களூருவில் இருக்கும் என்சிஏவில் இந்திய வீரர்களின் பிட்னெஸ் எந்தளவுக்கு இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தும் யோயோ சோதனை நடைபெற்று வருகிறது.

இதன்படி யோயோ டெஸ்டில் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி கலந்து கொண்டு தன்னுடைய உடல் தகுதியை நிரூபித்தார். அந்த தேர்வில் அனைத்து விதமான சோதனைகளையும் கடந்த விராட் கோலி 17.2 மதிப்பெண்கள் பெற்றுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டிருந்தார். அதைப் பார்த்த ரசிகர்கள் அவருடைய பிட்னஸ் தரத்தை வியந்து பாராட்டியதுடன் சுமாரான பிட்னஸ் கடைபிடிக்கும் இதர வீரர்களும் தங்களுடைய யோயோ மதிப்பெண்களை பகிர வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

இந்நிலையில் இந்திய அணிக்குள் நடக்கும் முக்கிய தகவல்களை வெளியே சொல்லக்கூடாது என்பது பிசிசிஐ வைத்திருக்கும் ஒரு விதிமுறையாகும். அந்த வரிசையில் இந்த யோயோ டெஸ்டில் எடுக்கும் மதிப்பெண் பற்றிய தகவல்களை வெளிப்படையாக பொதுவெளியில் அறிவிக்கக் கூடாது என்ற கொள்கையையும் பிசிசிஐ கடைபிடித்து வருகிறது. ஆனால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய யோயோ டெஸ்ட் ஸ்கோரை பதிவிட்டு விராட் கோலி அந்த விதிமுறையை மீறியுள்ளதால் பிசிசிஐ அதிருப்தியடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக இது போன்ற தகவல்களை வெளியிடக்கூடாது என்ற விதிமுறை இந்தியாவுக்காக விளையாடும் வீரர்களுக்கான மத்திய சம்பள ஒப்பந்தத்தில் இருக்கிறது. எனவே இனிமேல் அந்த விதிமுறையை மீறி இது போன்ற தகவல்களை சமூக வலைதளங்களில் பகிரக்கூடாது என்று விராட் கோலிக்கு பிசிசிஐ எச்சரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது பற்றி பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறியது பின்வருமாறு;-

"எந்த ஒரு ரகசியமான விஷயத்தையும் சமூக வலைதளங்களில் பதிவிடுவதை தவிர்க்குமாறு வீரர்களுக்கு வாய்மொழியாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பயிற்சிகளை செய்யும் போது எடுக்கும் புகைப்படங்களை வெளியிடலாம். ஆனால் மதிப்பெண்களை பகிர்வது ஒப்பந்த விதிமுறையை மீறுவதற்கு வழி வகுக்கிறது" என்று கூறினார். அதே போல எச்சரிக்கை மற்ற வீரர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.


Next Story