"ரோகித் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளார். ஆனால் இங்கே சிலர் ஒன்றை கூட வென்றதில்லை": கவுதம் கம்பீர்


ரோகித் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளார். ஆனால் இங்கே சிலர் ஒன்றை கூட வென்றதில்லை:  கவுதம் கம்பீர்
x
தினத்தந்தி 18 Sep 2023 10:52 AM GMT (Updated: 18 Sep 2023 12:00 PM GMT)

இலங்கையை அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்திய அணி 8-வது முறையாக ஆசிய கோப்பையை வென்று சரித்திரம் படைத்தது.

புது டெல்லி,

ஆசிய கோப்பை தொடரை வென்ற இந்தியா ஆசிய கண்டத்தின் புதிய சாம்பியனாக சாதனை படைத்துள்ளது. கடந்த 2 வாரங்களாக விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த தொடரில் லீக் மற்றும் சூப்பர் 4 சுற்றில் அசத்திய நடப்பு சாம்பியன் இலங்கையை அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா 8வது முறையாக ஆசிய கோப்பையை வென்று சரித்திரம் படைத்தது.

இந்த வெற்றியின் மூலம் ரோகித் சர்மா 2 ஆசிய கோப்பைகளை (2018, 2023*) வென்ற இந்திய கேப்டன்கள் என்ற முகமது அசாருதீன் மற்றும் எம்எஸ் தோனியின் சாதனையை சமன் செய்துள்ளார்.

ஆசிய கோப்பையை வென்ற ரோகித் சர்மாவுக்கு 2023 உலகக்கோப்பையில்தான் உண்மையான சோதனை காத்திருப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து கம்பீர் பேசியது பின்வருமாறு;-

"ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப்பில் எப்போதும் எந்த சந்தேகமும் இல்லை. ஏனெனில் அவர் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளார். ஆனால் இங்கே சிலர் ஒன்றை கூட வென்றதில்லை. இருப்பினும் ரோகித்துக்கு உண்மையான சோதனை வரும் நாட்களில் காத்திருக்கிறது. ஏனெனில் உங்களிடம் தற்போது இந்திய அணியில் 15 – 18 சிறந்த கிரிக்கெட் வீரர்கள் இருக்கின்றனர். அவர்களை வைத்து உலகக்கோப்பையை வெல்ல முடியாமல் போனால் உங்கள் மீது கேள்விகள் எழும்.

பொதுவாக ஒவ்வொரு உலகக்கோப்பை முடிந்த பின்பும் அதை வெல்ல முடியாவிட்டால் கேப்டன் மீது கேள்விகள் வரும். அதை விராட் கோலியும் சந்தித்தார். 2007-ல் ராகுல் டிராவிட்டும் சந்தித்தார். அதே போல 2023 உலகக்கோப்பையை இந்தியா வெல்ல முடியாவிட்டால் ரோகித் சர்மா கேப்டன்ஷிப் மீதும் அதிகமான கேள்விகள் வரும். ஆனால் இந்த இந்திய அணிக்கு உலகக்கோப்பையை வெல்லும் அளவிற்கு திறன் உள்ளது," என்று கூறினார்.


Next Story