சதம் விளாசிய விராட் கோலி... ஐதராபாத் அணிக்கு எதிராக 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி


சதம் விளாசிய விராட் கோலி... ஐதராபாத் அணிக்கு எதிராக 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி
x

Image Courtesy : @RCBTweets twitter

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு கோலி சதம் அடித்துள்ளார்.

ஐதராபாத்,

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 65-வது லீக் சுற்று ஆட்டம் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன் ரைசர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொண்டது.

இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ஐதராபாத் முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் ஷர்மா, ராகுல் திரிபாதி களமிறங்கினர். அபிஷேக் ஷர்மா 11 ரன்கள் , ராகுல் திரிபாதி 15 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

பின்னர் ஹென்ரிச் கிளாசென், மார்க்ரம் இருவரும் இனைந்து சிறப்பாக ஆடினர். குறிப்பாக ஹென்ரிச் கிளாசென் அதிரடி காட்டினார். பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்ட அவர் அரைசதம் அடித்தார்.

மறுபுறம் மார்க்ரம் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹார்ரி புரூக் கிளாசெனுடன் இணைந்து சிறப்பாக ஆடினார். தொடர்ந்து அதிரடி காட்டிய கிளாசென் 49 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். இறுதியில் 20 ஓவர்களுக்கு ஐதராபாத் 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்தது. தொடர்நது 187 ரன்கள் இலக்குடன் பெங்களூரு விளையாடியது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி, டு பிளிசிஸ் களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடி காட்டிய விராட் கோலி, 63 பந்துகளில் சதம் விளாசினார். ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு கோலி சதம் அடித்துள்ளார்.

100 ரன்கள் சேர்த்த விராட் கோலி, புவனேஸ்வர் குமாரின் பந்துவீச்சில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். மறுமுனையில் டுபிளிசிஸ் 7 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் விளாசி 47 பந்துகளில் 71 ரன்கள் குவித்து அவுட் ஆனார். இறுதியாக பெங்களூரு அணி 19.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணி புள்ளிப் பட்டியலில் 4-வது இடத்தைப் பிடித்துள்ளது. முதல் மூன்று இடங்களில் முறையே குஜராத், சென்னை மற்றும் லக்னோ அணிகள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story