விராட் கோலி, கே.எல்.ராகுல் அதிரடி சதம்: பாகிஸ்தானுக்கு 357 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா..!
50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 356 ரன்கள் குவித்தது.
கொழும்பு,
16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை இலங்கை மற்றும் பாகிஸ்தான் இணைந்து நடத்துகிறது. 6 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் சூப்பர்4 சுற்றுக்குள் நுழைந்தன. சூப்பர்4 சுற்றில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற சூப்பர்4 சுற்றின் 3-வது ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில் மற்றும் ரோகித் சர்மா களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இதனால் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் தொடர்ந்து 2-வது முறையாக 100 ரன்களை தாண்டியது.
இருவரும் அரைசதம் அடித்த நிலையில் ஆட்டமிழந்தனர். முதலில் ரோகித் 56 ரன்களிலும், சிறிது நேரத்திலேயே கில் 58 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இந்த நிலையில் இந்திய அணி 24.1 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டத்தின் இடையே மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின் கள நடுவர்கள் தொடர்ந்து ஆய்வு செய்தபோது மைதானம் ஈரப்பதமாக இருந்ததால் போட்டி நேற்று ரத்து செய்யப்பட்டது. விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் களத்தில் இருந்தனர்.
இதன் காரணமாக இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சூப்பர்4 சுற்று ஆட்டம் இன்று (ரிசர்வ் டே) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. முதலில் இன்று மாலை 3 மணிக்கு ஆட்டம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் மழை பெய்ததன் காரணமாக ஆட்டம் தொடங்குவதில் தாமதம் எற்பட்டது. பின்னர் மழை நின்ற பிறகு மீண்டும் போட்டி தொடங்கி நடைபெற்றது.
அதிரடியாக விளையாடிய விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் இருவரும் சதமடித்து அசத்தினர். இந்த சதத்தின் மூலம் கே.எல்.ராகுல் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தனது ஆறாவது சதத்தை பதிவு செய்தார். இந்த நிலையில் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 356 ரன்கள் குவித்தது. விராட் கோலி 122 ரன்களும் கே.எல்.ராகுல் 111 ரன்களும் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர். இதையடுத்து 357 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்ய உள்ளது.