இந்தியாவுக்கு எதிராக எளிதான திட்டத்தை பின்பற்றி நாங்கள் வெல்வோம் - இங்.பயிற்சியாளர்


இந்தியாவுக்கு எதிராக எளிதான திட்டத்தை பின்பற்றி நாங்கள் வெல்வோம் - இங்.பயிற்சியாளர்
x

image courtesy; AFP

தினத்தந்தி 23 Jan 2024 6:02 AM GMT (Updated: 23 Jan 2024 6:11 AM GMT)

இந்தியாவில் தங்களுடைய புதிய அதிரடி அணுகுமுறை சோதிக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாக இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பிரன்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்,

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இந்த தொடரின் முதல் போட்டி ஐதராபாத்தில் வரும் 25-ம் தேதி தொடங்க உள்ளது.

சொந்த மண்ணில் நடைபெறும் இந்த தொடரில் இங்கிலாந்தை தோற்கடித்து இந்தியா வெல்லும் என்று இந்திய ரசிகர்கள் நம்புகின்றனர். ஏனெனில் கடந்த 12 வருடங்களாக உலகின் எந்த அணிக்கு எதிராகவும் தங்களுடைய சொந்த மண்ணில் இந்தியா ஒரு தொடரில் கூட தோற்காமல் வெற்றி நடை போட்டு வருகிறது.

ஆனால் பென் ஸ்டோக்ஸ் - பிரன்டன் மெக்கல்லம் ஆகியோர் புதிய கேப்டன் மற்றும் பயிற்சியாளராக பொறுப்பேற்றது முதல், டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20போல அதிரடியாக விளையாடி இங்கிலாந்து தொடர் வெற்றிகளை குவித்து வருகிறது. எனவே 2012-ல் நடந்ததுபோல் இம்முறையும் இந்தியாவில் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் இங்கிலாந்து இத்தொடரில் விளையாட உள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் தங்களுடைய புதிய அதிரடி அணுகுமுறை சோதிக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாக இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பிரன்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார். அந்த சோதனைக்குதான் நாங்களும் காத்திருப்பதாக தெரிவிக்கும் அவர் இந்தியாவை வீழ்த்த ஒரு போட்டியில் 20 விக்கெட்டுகள் எடுக்க வேண்டும் என்ற ராக்கெட் அறிவியலை விட எளிதான திட்டத்தை பின்பற்றி தாங்கள் வெல்வோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியதாவது ;- "இந்த தொடரில் எங்களுடைய அணுகுமுறை சோதிக்கப்படும். அதைத்தான் நான் இந்த தொடரில் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். எங்களுடைய வழிமுறைகள் இத்தொடரில் சவாலை சந்திக்கும். அதில் நாங்கள் எங்கே இருக்கிறோம் என்பதை பார்க்க உள்ளேன். இது ஆர்வம் மிகுந்த வாய்ப்பாகும். இறுதியில் எங்களுடைய அணியில் உள்ள தரமான வீரர்களை வைத்து சிறப்பாக செயல்பட வேண்டும். வீரர்கள் களத்தில் முக்கியமான நேரத்தில் வேகமாக செயல்பட வேண்டும்.

ஒவ்வொரு போட்டியிலும் நாங்கள் பந்து வீச்சில் 20 விக்கெட்டுகள் எடுக்க வேண்டும். அத்துடன் இந்தியாவை விட நாங்கள் பேட்டிங்கில் ஒரு ரன் எக்ஸ்ட்ராவாக எடுக்க வேண்டும். இந்த திட்டங்கள் ராக்கெட் அறிவியல் கிடையாது. அதைவிட எளிதான திட்டத்தை பின்பற்றி நாங்கள் வெல்வோம்" இவ்வாறு அவர் பேசினார்.


Next Story