வில்லியம்சன், மிட்செல் அரைசதம்...வங்காளதேசத்தை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த நியூசிலாந்து...!


வில்லியம்சன், மிட்செல் அரைசதம்...வங்காளதேசத்தை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த நியூசிலாந்து...!
x

Image Courtesy: @BLACKCAPS

நியூசிலாந்து தரப்பில் கேன் வில்லியம்சன் மற்றும் டேரில் மிட்செல் அரைசதம் அடித்தனர்.

சென்னை,

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

இந்நிலையில் இன்று சென்னையில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து - வங்காளதேசம் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் ஆடிய வங்காளதேசம் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்களே எடுத்தது. இதையடுத்து 246 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து ஆடியது.

நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கான்வே மற்றும் ரவீந்திரா ஆகியோர் களம் இறங்கினர். இதில் ரவீந்திரா 9 ரன்னிலும், கான்வே 45 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து வில்லியம்சன் மற்றும் டேரில் மிட்செல் இணைந்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். நிதானமாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர்.

வில்லியம்சன் 78 ரன்கள் எடுத்த நிலையில் காயம் காரணமாக (ரிடையர்ட் ஹர்ட்) வெளியேறினார். இதையடுத்து க்ளென் பிலிப்ஸ் களம் இறங்கினார். இறுதியில் நியூசிலாந்து 42.5 ஓவரில் 2 விக்கெட்டை மட்டுமே இழந்து 248 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நடப்பு உலகக்கோப்பையில் நியூசிலாந்து பெற்ற 3வது (ஹாட்ரிக்) வெற்றி இதுவாகும்.


Next Story