மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: கடைசி லீக் போட்டியில் இலங்கையை வீழ்த்தியது பாகிஸ்தான்

Image Courtesy: Pakistan Cricket
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் அரைஇறுதிக்கு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து அணிகள் முன்னேறி உள்ளன.
சில்கெட்,
ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டித் தொடர் வங்காளதேசத்தில் நடைபெற உள்ளது. அந்நாட்டில் உள்ள சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் அனைத்துப் போட்டிகளும் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், தாய்லாந்து, இலங்கை, மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் மோதுகின்றன.
இத்தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் இன்று ஏற்கனவே அரை இறுதிக்கு முன்னேறிய இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி 18.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 112 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அந்த அணி தரப்பில் கேப்டன் அத்தபத்து 41 ரன்கள் அடித்தார். பாகிஸ்தான் அணி தரப்பில் ஒமைமா சோகைல் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து 113 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களம் இறங்கியது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் நீடிக்கலாம் என்ற நிலையில் பாகிஸ்தான் அணி தனது இன்னிங்சை தொடங்கியது. பாகிஸ்தான் அணியும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் அந்த அணி 18.5 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இதன் மூலம் பாகிஸ்தான் அணி புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் நீடிக்கிறது. லீக் சுற்று ஆட்டங்கள் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து அணிகள் அரை இறுதிக்கு முன்னேறின. தொடரை நடத்தும் வங்காளதேசம், யூஏஇ, மலேசியா அணிகள் லீக் சுற்றிடன் வெளியேறின.






