மகளிர் கிரிக்கெட்;- நியூசிலாந்து அணியை விழ்த்தி வரலாறு படைத்த இலங்கை அணி...!!


மகளிர் கிரிக்கெட்;- நியூசிலாந்து அணியை விழ்த்தி  வரலாறு படைத்த  இலங்கை அணி...!!
x

image courtesy;twitter/@ICC

தினத்தந்தி 12 July 2023 9:07 AM GMT (Updated: 12 July 2023 9:17 AM GMT)

டி20 போட்டிகளில் முதன் முறையாக நியூசிலாந்து அணியை வீழ்த்தி வரலாற்று வெற்றியை இலங்கை அணி பதிவு செய்துள்ளது.

கொழும்பு,

நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது.

முதலில் நடந்த ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியது.

இதனையடுத்து டி20 தொடர் நடைபெற்றது. முதல் இரண்டு போட்டிகளில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக சோபியா டிவைன் அதிரடியாக ஆடி 46 ரன்கள் எடுத்தார். இலங்கை அணி தரப்பில் ரனவீரா 3 விக்கெட்டுகள் விழ்த்தினார்.

இதனையடுத்து 141 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற களமிறங்கிய இலங்கை பெண்கள் அணி 14.3 ஓவரில் 143 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் டி20 போட்டி வரலாற்றில் முதன் முறையாக நியூசிலாந்து அணியை வீழ்த்தி வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. அதிரடியாக விளையாடிய இலங்கை பெண்கள் அணியின் கேப்டன் சமரி அத்தபத்து 80 ரன்கள் எடுத்து ஆட்டநாயகி விருதை தட்டிச்சென்றார்.

தொடர் நாயகி விருது நியூசிலாந்து வீராங்கனை சுசி பேட்ஸ்க்கு வழங்கப்பட்டது.


Next Story