மகளிர் டி20 கிரிக்கெட்; வங்காளதேசத்தை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றிய ஆஸ்திரேலியா


மகளிர் டி20 கிரிக்கெட்; வங்காளதேசத்தை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றிய ஆஸ்திரேலியா
x

Image Courtesy: @BCBtigers

இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் ஆஸ்திரேலியா 3-0 என முழுமையாக கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

டாக்கா,

ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 3-0 என ஆஸ்திரேலியா கைப்பற்றியது. இதையடுத்து நடைபெற்ற டி20 தொடரின் முதல் இரு ஆட்டங்களின் முடிவில் 2-0 என ஆஸ்திரேலியா முன்னிலை பெற்றிருந்தது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலியா 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா தரப்பில் அலிசா ஹீலி 45 ரன்னும், தஹ்லியா மெக்ராத் 44 ரன்னும் எடுத்தனர். வங்காளதேசம் தரப்பில் நஹிதா அக்டர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து 156 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய வங்காளதேச அணி ஆஸ்திரேலியாவின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 18.1 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்த வங்காளதேசம் வெறும் 78 ரன்கள் எடுத்த நிலையில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 77 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா தரப்பில் டெய்லா விலேமின்க் 3 விக்கெட்டும், ஜார்ஜியா வேர்ஹாம் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஆஸ்திரேலியா 3-0 என முழுமையாக கைப்பற்றியது. ஏற்கனவே இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் ஆஸ்திரேலியா 3-0 என முழுமையாக கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.


Next Story