பெண்கள் டி20 உலகக்கோப்பை: 3 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது வெஸ்ட் இண்டீஸ்...!
8-வது பெண்கள் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது.
கியூபெர்தா,
8-வது பெண்கள் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.
இதையடுத்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மேத்யூஸ் மற்றும் வில்லியம்ஸ் ஆகியோர் களம் புகுந்தனர். இதில் மேத்யூஸ் 20 ரன், வில்லியம்ஸ் 30 ரன் மற்றும் அடுத்து வந்த கேம்ப்பெல்லே 22 ரன் எடுத்தனர். இறுதியில் அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 116 ரன்களே எடுத்தது.
அந்த அணி தரப்பில் வில்லியம்ஸ் 30 ரன்னும், மேத்யூஸ் 20 ரன்னும் எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் நிடா டார் 2 விக்கெட்டும், இக்பால், பாத்திமா சனா, நஷ்ரா சந்து, துபா ஹசன் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து 117 ரன் எடுத்தால் அரையிறுதி செல்லும் வாய்ப்பை தக்க வைத்து கொள்ளலாம் என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களம் புகுந்தது . அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரராக களம் புகுந்த முனீபா அலி 5 ரன், சிட்ரா அமீன் 8 ரன், நிடா டார் 27 ரன் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
நிலைத்து நின்று ஆடிய அந்த அணியின் கேப்டன் பிஸ்மா மரூப் 26 ரன் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார். இறுதியில் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 113 ரன்களே எடுத்தது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் பாகிஸ்தான் தோல்வி அடைந்ததன் மூலம் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது.