மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்; தீப்தி சர்மா அபார பந்து வீச்சு... இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 136 ரன்களில் ஆல் அவுட்..!


மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்; தீப்தி சர்மா அபார பந்து வீச்சு... இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 136 ரன்களில் ஆல் அவுட்..!
x

image courtesy; twitter/@BCCIWomen

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 428 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.

மும்பை,

இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 1 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் நடைபெற்ற டி20 தொடரை இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையே 4 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 428 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் சுபா சதீஷ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், யாஸ்திகா பாட்டியா மற்றும் தீப்தி ஷர்மா ஆகிய 4 வீராங்கனைகள் அரைசதம் அடித்து அசத்தினர்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து வீராங்கனைகள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விரைவில் ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் நாட் ஸ்கிவர்-ப்ரண்ட் தவிர மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். வெறும் 35.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 136 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணி தரப்பில் அதிகபட்சமாக நாட் ஸ்கிவர்-ப்ரண்ட் 59 ரன்கள் அடித்தார். இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக தீப்தி சர்மா 5 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார்.

இதனையடுத்து 292 ரன்கள் முன்னிலை என்ற வலுவான நிலையில் தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, தற்போது வரை 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 71 ரன்கள் அடித்துள்ளது.


Next Story