உலகக்கோப்பை கிரிக்கெட்; இங்கிலாந்தின் சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்த தென் ஆப்பிரிக்கா..!!


உலகக்கோப்பை கிரிக்கெட்; இங்கிலாந்தின் சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்த தென் ஆப்பிரிக்கா..!!
x

image courtesy; AFP

தினத்தந்தி 1 Nov 2023 1:10 PM GMT (Updated: 1 Nov 2023 1:22 PM GMT)

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் விளையாடி வருகின்றன.

புனே,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகள் புனேவில் விளையாடி வருகின்றன.

இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக பவுமா மற்றும் டி காக் களம் இறங்கினர். இதில் பவுமா 24 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து ஜோடி சேர்ந்த டி காக் மற்றும் வான் டெர் டுசென் இணை ரன் குவிப்பில் ஈடுபட்டனர். அபாரமாக ஆடிய இருவரும் சதம் அடித்து அசத்தினர். இவர்களில் முதலில் சதம் அடித்த டி காக் 114 ரன்களில் ஆட்டமிழந்தார். இது இந்த உலகக்கோப்பை தொடரில் அவரது 2-வது சதமாகும். இவர்கள் இருவரும் 2-வது விக்கெட் பார்ட்னர்ஷிப்பிற்கு 200 ரன்கள் குவித்தனர். அதிரடியாக விளையாடிய வான் டெர் டுசென் 118 பந்துகளில் 133 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார்.

இறுதி கட்டத்தில் டேவிட் மில்லர் அதிரடியில் மிரட்ட தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 357 ரன்கள் குவித்துள்ளது. மில்லர் 30 பந்துகளில் 53 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார். நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக டிம் சவுதி 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் மொத்தம் 15 சிக்சர்கள் அடித்துள்ளனர். இந்த உலகக்கோப்பையில் இதுவரை தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் மொத்தம் 82 சிக்சர்கள் அடிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு தொடரில் அதிக சிக்சர்கள் அடித்த அணி என்ற இங்கிலாந்தின் மாபெரும் சாதனையை தகர்த்த தென் ஆப்பிரிக்கா புதிய உலக சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் கடந்த 2019 உலகக்கோப்பையில் இங்கிலாந்து 76 சிக்சர்கள் அடித்திருந்ததே முந்தைய உலக சாதனையாக இருந்தது. தற்போது அதனை தகர்த்து தென் ஆப்பிரிக்கா புதிய சாதனை படைத்துள்ளது.


Next Story