பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து: தென்கொரியா வீராங்கனை சாதனை


பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து: தென்கொரியா வீராங்கனை சாதனை
x

இளம் வயதில் உலகக் கோப்பை போட்டியில் கால்பதித்த வீராங்கனை என்ற பெருமையை கேசி பேயர் பெற்றார்.

சிட்னி,

பெண்களுக்கான 9-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள நடப்பு சாம்பியன் அமெரிக்கா, முன்னாள் சாம்பியன்கள் ஜெர்மனி, ஜப்பான், நார்வே உள்ளிட்ட 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நாக்-அவுட் (ரவுண்ட் 16) சுற்றுக்கு முன்னேறும்.

6-வது நாளான நேற்று 3 லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. சிட்னியில் நடந்த ('எச்' பிரிவு) ஆட்டம் ஒன்றில் கொலம்பியா-தென்கொரியா அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் கொலம்பியா 2-0 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி போட்டியை வெற்றியுடன் தொடங்கியது.

கொலம்பியா அணியில் காதலினா உஸ்மி 30-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பிலும், லிண்டா காய்சிடோ 39-வது நிமிடத்திலும் கோலடித்தனர். அறிமுக வீராங்கனையாக களம் கண்ட 18 வயதான லிண்டா காய்சிடோ நடப்பு உலகக் கோப்பை தொடரில் கோல் அடித்த இளம் வீராங்கனை என்ற பெருமையை தனதாக்கினார். இவர் புற்றுநோயில் இருந்து மீண்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த போட்டியில் தென்கொரியா அணிக்காக கேசி பேயர் 78-வது நிமிடத்தில் மாற்று வீராங்கனையாக இறங்கியது சாதனையாக அமைந்தது. அவரது வயது 16 ஆண்டு 26 நாட்களாகும். இதன் மூலம் அவர் இளம் வயதில் உலகக் கோப்பை போட்டியில் கால்பதித்த வீராங்கனை என்ற சிறப்பை பெற்றார்.


Next Story